கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது ஒல்லியம்பாளையம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் ராஜேஷ் (28). கூலி வேலை செய்துவந்த இவர், அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுடன் பழகி காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணைப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று காதல் மொழி பேசிய ராஜேஷ், இருவரும் காதலர்களாக பல மாதங்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்றுவந்தனர். ஒருகட்டத்தில் அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ராஜேஷை வற்புறுத்தியுள்ளார். அப்போது ராஜேஷ், திருப்பூருக்கு அழைத்துச் சென்று தனது வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொள்வதாக அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார்.
திடீரென்று ஒருநாள், உளுந்தூர்பேட்டை சென்று அங்கு திருமணம் செய்துகொள்வோம் என்று கூறி அந்தப் பெண்ணை அழைத்துவந்த ராஜேஷ், பேருந்து நிலையத்தில் அந்தப் பெண்ணைத் தனியாக தவிக்க விட்டுவிட்டு ஓடிவிட்டார். அந்தப் பெண் ராஜேஷை தேடிச் சென்று என்னை ஏமாற்றப் பார்க்கிறாயா? உண்மையைக் கூறு, என்னைத் திருமணம் செய்துகொள் என்று கேட்டதற்கு ராஜேஷ் மறுத்துள்ளார். தான் காதல் என்ற பெயரில் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளம்பெண், உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவுசெய்த மகளிர் போலீசார், ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது சம்பந்தமான வழக்கு விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று (16.12.2021) இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, காதலித்து இளம்பெண்ணை ஏமாற்றிய ராஜேஷுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 25,000 ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். மேலும், இந்தத் தொகையைப் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராஜேஷ், போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறைக்குக் கொண்டு சென்று அடைக்கப்பட்டுள்ளார்.