டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.
தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவர் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில், அந்த நபர் திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது.
மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து மயிலாப்பூர் சாந்தோம் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கடந்த புதன்கிழமை வந்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டதோடு, வீட்டிற்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒன்றை ஒட்டிவிட்டு சென்றிருந்தனர். இப்பொழுது வரை ஜாபர் சாதிக் தலைமறைவாக உள்ளார். இந்நிலையில், நேற்று இரவு ஆட்டோவில் வந்த ஜாபர் சாதிக்கின் தாயார் உறவினர் ஒருவருடன் வந்து நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீசை கிழித்தெறிந்ததோடு, வீட்டிற்கு புதிய பூட்டு ஒன்றை போட்டு பூட்டிவிட்டு அவரும் தலைமறைவாகியுள்ளார். அவர் வந்த ஆட்டோ எண் மற்றும் அவருடன் வந்த உறவினர் யார் என்பது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.