காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றிய உமையாள் பரணிச்சேரி அரசு உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக அரசுப்பணியில் பணிபுரிந்து கடந்த 24.3.2018 அன்று மாணவர்களுடன் சுற்றுலாச் சென்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அகலான மரணமடைந்த வெங்கடேஷ்க்கு படப்பை வில்வம் மஹாலில் நினைவஞ்சலி கூட்டமும் அதனைத் தொடர்ந்து நிதி அளிப்பு கூட்டமும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் தலைமை வகித்தார்.
இந்நினைவஞ்சலி கூட்டத்திற்கு தமிழ்நாடு மெட்ரிக் பள்ளி இயக்குனர் முனைவர் எஸ். கண்ணப்பன், காஞ்சிபுரம் முதன்மைக்கல்வி அலுவலர் ஆர்.திருவளர்செல்வி, மாவட்டக்கல்வி அலுவலர் எஸ்.தயாளன், காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் பி.மகேஸ்வரி, செங்கல்பட்டு மாவட்டக் கல்வி அலுவலர் பி.ஏகாம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் பாலாஜி அனைவரையும் வரவேற்று பேசினார்.
மாநிலச் செயலாளர் இரமேஷ், மாநிலப் பொருளாளர் உதயகுமார், தலைமைநிலையச் செயலாளர் அருள்குமார், மாநில அமைப்புச் செயலாளர் தாமோதரன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மணிகண்டன், கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்கத்தின் தொடர்பணிகள் குறித்து செய்தித் தொடர்பாளர்கள் சந்திரன், வெங்கடேசன் மாநிலத் துணைத்தலைவர்கள் மாதேஸ்வரன், இரமேஷ், ராஜசேகர், உலகநாதன் உள்ளிட்டோர் பேசினர்.
பல்வேறு மாவட்டங்களின் மாவட்டப் பொறுப்பாளர்கள் வட்டாரப் பொறுப்பாளர்கள் ஆசிரியப் பெருமக்கள் பெரும் திரளாக இரங்கல் கூட்டத்திற்கு வருகை புரிந்து மறைந்த ஆசிரியர் வெங்கடேஷ்க்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இந்த இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு ஆசிரியர் கூறும் போது, தனது பள்ளி மாணவன் வீடு தீ பற்றி எரிந்து பொருட்களும் எரிந்து நாசமானது. தகவல் அறிந்து அந்த மாணவன் வீட்டிற்கு சென்ற ஆசிரியர் ஹாலோ பிளாக் சுவரில் கூரைஅமைத்து வீட்டு உபபோகப் பொருளையும் வாங்கி கொடுத்தவர். இது போல பல நல்லது செஞ்சவர் தான் மறைந்த இந்த ஆசிரியர் என்று கண்கலங்கினார் நினைவு கூர்ந்த அந்த ஆசிரியர்.
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆர்.திருவளர்செல்வி இரங்கல் உரையாற்றினார். மெட்ரிக் பள்ளி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் ஆகியோர் மறைந்த ஆசிரியர் வெங்கடேஷ் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க ஆசிரியர்கள் சார்பாக
திரட்டிய நிதி ரூபாய் 5 இலட்சத்து 50 ஆயிரத்தை (550000) வழங்கினர்.
மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் பேசும் போது, இவ்வாசிரியரின் மரணம் ஒரு எதிர்பாராத சம்பவம். இவர் அரசுப்பணியில் இருந்து இறந்தாலும் இவர் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரிந்து இறந்ததால் அவர் செலுத்திய தொகை மற்றும் அரசின் பங்களிப்பு ஆகியவை தவிர எவ்வித ஓய்வூதியப்பலனும் கிடைக்காது. மேலும் குடும்ப ஓய்வூதியமும் கிடையாது. அன்னாருக்கு இரண்டு குழந்தைகள் பள்ளியில் படித்து வரும் நிலையில் அவர்களது பள்ளிப் படிப்பும் அவர்களது எதிர்காலமும் கேள்விக்குறியான நிலையில் அவர்களது குடும்பம் தனித்துவிடப்படும் நிலையில் உள்ளது. இது தான் புதிய பென்சன் திட்டத்திலிருந்து இறந்த மற்றும் ஓய்வு பெற்றவர்களின் நிலை.
இத்திட்டத்தில் பணிபுரிந்து 1500க்கும் மேற்பட்டோர் இதுவரை 5000க்கு மேற்பட்டோர் ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். 58 வயது வரை அரசிற்காக உழைத்துவிட்டு கடைசிகாலத்தில் நிம்மதியின்றி துன்புறுகின்றனர்.
இவர்களின் அவலநிலையை உணர்ந்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் தனியாகவும், ஜேக்டோ ஜியோ உடன் இணைந்தும் பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை இரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கை மற்றும் சட்டசபையில் 110 விதியின் கீழ் பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை இரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியம் அளிக்கப்படும் என அறிவித்திருந்தார். அதற்காகவே வல்லுநர் குழு அமைத்தார். அவ்வல்லுநர் குழு இதுவரை 7 முறை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இவ்வல்லுர் குழுவை இனியும் நீட்டிப்பு செய்யாமல் அம்மாவின் வழியில் ஆட்சி செய்கிறோம் என்று கூறும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் உடனடியாக குழுவின் அறிக்கையை பெற்று பங்களிப்பு ஓய்வூதியத்தை இரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமுல்படுத்திட இந்த இரங்கல் கூட்டத்தின் வாயிலாக தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
இவ்வாசிரியரின் மரணத்திற்கு காரணம் தனது உடல் நலத்தை பரிசோதிக்காமல் இருந்ததன் விளைவே. இது போன்ற அகால மரணம் இனி நடக்காமல் இருப்பதற்கு தமிழக அரசு, அரசு ஊழியர்களில் இருந்து மாதம் தோறும் ரூபாய் 180 வீதம் ஆண்டிற்கு 2160 பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த காப்பீட்டு திட்டத்தில் உள்ள பெரும்பாலன அரசு ஊழியர் எவ்வித பலனும் இல்லை. எனவே இத்திட்டத்தில் உள்ள காப்பீட்டு திட்டத்தை பயன்படுத்தாத அரசு ஊழியர்களுக்கு, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி இந்த இரங்கல் கூட்டத்தின் வாயிலாக சங்கம் தமிழக அரசை வலியுறுத்துகிறது என்றார்.
முடிவில் குன்றத்தூர் ஒன்றியச் செயலாளர் பிரகாஷ் நன்றியுரையாற்றினர்.