2013ஆம் வருடம் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் சார்பில் இன்று (20.02.2021) செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் கூறுகையில், “தமிழகத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதை மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நடைமுறைபடுத்தியிருந்த நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு இன்று வரை ஒரு காலிப்பணியிடங்கள் கூட நிரப்பப்படவில்லை.
ஆனால் தற்போது தமிழக அரசு, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் புதிதாக ஒரு நியமன தேர்வை எழுத வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறது. அதை எதிர்த்து நாங்கள் இதுவரை நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் தொடுத்துள்ளோம் சுமார் 22 மாவட்டங்களில் உண்ணாவிரதம், ஊர்வலம், மறியல், காத்திருப்புப் போராட்டம், சான்றிதழ் ஒப்படைப்பு போராட்டம் என பல போராட்டங்களை தொடர்ந்து நடத்தி விட்டோம். ஆனால் இதுவரை இந்த அரசு எந்தப் பதிலும் அளிக்க முன்வரவில்லை. கடந்த வாரத்தில் கூட நாங்கள் முதல்வரையும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரையும் சந்தித்தோம். அப்போது 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டுவரப்பட்ட நியமனத் தேர்வு எழுத வேண்டும் என்பதை உடனடியாக ரத்து செய்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம்.
மேலும், நடப்பு கல்வி ஆண்டில் சுமார் 5 லட்சம் மாணவர்கள் பள்ளியில் சேர்ந்துள்ளனர் என்று கூறும் அரசு, ஆசிரியர் பணியிடங்களை மட்டும் ஏன் நிரப்பாமல் உள்ளது? எங்களுடைய கோரிக்கையை ஏற்கக்கூடிய எந்தக் கட்சிக்காகவும் நாங்கள் நேரடியாக களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து அவர்களுக்காக வாக்கு சேகரிக்கவும் தயங்கமாட்டோம். தற்போது ஒரு லட்சம் பேர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் நிலையில், இந்த ஒரு லட்சம் குடும்பங்களும் சேர்ந்து எங்களுடைய கோரிக்கையை ஏற்பவர்களுக்கு மட்டுமே எங்களுடைய ஆதரவை நாங்கள் தருவோம்.
இந்த அரசு எங்களை ஒரு வாத்தியாராக பார்க்கவில்லை என்றாலும் குறைந்த பட்சமாக ஒரு வாக்காளராக பார்க்க வேண்டும். இன்றும் விடியலை நோக்கி நாங்கள் முன்னேறி செல்ல உள்ளோம். தற்போதைய இந்த அரசு இரண்டு வருடத்திற்கு ஒருமுறை தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டே வருகிறது. ஆனால் இந்த தகுதி தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றிருக்கக்கூடிய எங்களுக்கு, நியமன தேர்வு தேவை என்பதை கொள்கை அடிப்படையில் கூறுவதாக இந்த அரசு கூறுகிறது. ஆனால் கொள்கை முடிவில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை மாற்றங்கள் இருந்துகொண்டே இருந்தால், அதனால் பாதிக்கப்படுவது ஆசிரியர்களாகிய நாங்கள்தான். எனவே வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எங்களுடைய கோரிக்கையை ஏற்று அதற்கான அறிவிப்பை இந்த அரசு வழங்க வேண்டும். இல்லை என்றால் நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வோம்” என்று தெரிவித்துள்ளனர்.