பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான 17 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் பாலியல் குற்றவாளியான பள்ளி ஆசிரியரின் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் ஆர்.எஸ் புரத்தைச் சேர்ந்த தம்பதியின் 17 வயது மகள், தடாகம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். இந்நிலையில், அதே பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் மிதுன் சக்கரவர்த்தி. குரு ஸ்தானத்தில் இருக்க வேண்டிய இவர், அந்த மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தனியாக வகுப்பறைக்கு வரச் சொல்லி ஆபாச சீண்டல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதற்கிடையில், மிதுன் சக்கரவர்த்தியின் செயலால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, இதை எங்கே சொல்வது எனத் தெரியாமல் திகைத்துப் போயுள்ளார். ஒருகட்டத்தில், தனது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால், அந்த பள்ளியில் தலைமையாசிரியராக இருக்கும் மீரா ஜாக்சன் மாணவியின் புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், அந்த சிறுமி பள்ளியில் இருந்து டிசி வாங்கிக்கொண்டு அதே பகுதியில் அரசுப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு சேர்ந்துள்ளார். ஆனாலும், விடாத ஆசிரியர் மிதுன் அந்த மாணவிக்கு வாட்ஸாப் மூலம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி, அந்த மாணவியிடம் அதே பகுதியைச் சேர்ந்த முகமது சுல்தான் மற்றும் மனோராஜ் ஆகியோரும் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
ஒருகட்டத்தில், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, திடீரென கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே சமயம், இச்சம்பவத்தில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, தலைமையாசிரியர் மீரா ஜாக்சன், சுல்தான் மற்றும் மனோராஜ் ஆகிய நான்கு பேரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது, இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், தற்கொலை செய்துகொண்ட மாணவியின் செல்போனை சென்னை சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வந்துள்ளனர்.
அந்த ஆய்வில் பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவலும் வெளியாகியுள்ளது. அந்த மாணவி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் பாலியல் துன்புறுத்தல் குறித்து அவரது மனைவி அர்ச்சனாவிடம் முறையிட்டுள்ளார். ஆனால், அந்த தகவலை அர்ச்சனா போலீசிடம் இருந்து மறைத்துள்ளார். தற்போது, அந்த செல்போனில் இருந்த உரையாடலின் அடிப்படையில் மிதுன் சக்கரவர்த்தியின் மனைவியான அர்ச்சனாவை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அதே சமயம், அர்ச்சனாவும் ஒரு ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழலில், கோவை மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் ஆசிரியரின் மனைவியும் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.