கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாகலூர் சாலையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், கடந்த 23ஆம் தேதி மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதியில் உள்ள ஏராளமான பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
அந்த வகையில், ஓசூரைச் சேர்ந்த ஒரு தனியார் பள்ளி மாணவிகள் இந்த போட்டியில் பங்கேற்றிருந்தனர். அப்போது, ஒரு ஆசிரியையின் கைக் கடிகாரத்தை அந்த பள்ளியைச் சேர்ந்த மாணவி ஒருவர் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அந்த ஆசிரியை, அந்த மாணவியையும் அவரது உடற்பயிற்சி ஆசிரியரையும் தகாத வார்த்தைகளாக பேசி கடுமையாக திட்டியுள்ளார். மேலும், இது குறித்து அந்த மாணவியின் பெற்றோருக்கு இது குறித்து தகவல் கொடுத்துள்ளார்.
அதன் பிறகு, மாணவி கீழே கிடந்த கைக்கடிகாரத்தை எடுத்து அந்த ஆசிரியையிடம் கொடுத்துள்ளார். ஆனாலும், அந்த ஆசிரியை சமாதானம் ஆகாமல் கை கடிகாரத்தை மாணவி திருடியதாகக் குற்றம்சாட்டி மீண்டும் திட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த உடற்பயிற்சி ஆசிரியர் பள்ளி வளாகத்தில் வெளியே அந்த மாணவியை சரமாரியாக தாக்கியுள்ளார். உடற்பயிற்சி ஆசிரியர், அந்த மாணவியை கண்மூடித்தனமாக தாக்கியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுகிறார். இது தொடர்பான சம்பவம், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவு கேமரா காட்சிகளில் பதிவாகியிருந்தது.
இந்த காட்சி வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், உடற்கல்வி ஆசிரியராக பணிபுரியும் தியாகராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது ஆசிரியர் தியாகராஜன் மீது பெண் வன்கொடுமைச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.