ஆசிரியை திட்டியதால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள முதனை கிராமத்தை சேர்ந்தவர் முருகன். தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் அமராவதி (வயது 15). அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அமராவதி முதனை பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஊ.மங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அமராவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அமராவதியின் தந்தை முருகன் போலீசில் புகார் செய்தார். அதில் எனது மகள் அமராவதியை கணித பாடத்தில் குறைவான மதிப்பெண் எடுத்ததாக பள்ளி ஆசிரியை திட்டி கண்டித்ததாக தெரிகிறது. இதனால் வீட்டில் யாருடனும் பேசாமல் சோகமாகவே காணப்பட்டாள். மனமுடைந்த அவள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாள். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் இதுசம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.