2011 ஆம் ஆண்டுக்கு முன் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2011 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது. மேலும் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் அவர்கள் பணியில் நீடிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. அதேசமயத்தில் பதவி உயர்வு என்று வரும் பொழுது அவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்கள். நேரடி நியமன ஆசிரியர்களுக்கு மட்டும் தகுதித்தேர்வை கட்டாயமாக்கும் அரசின் உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த வழக்கின் பின்னணியாக மத்திய அரசு கடந்த 2009 ஆம் ஆண்டு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் 60% தேர்ச்சி பெற வேண்டும் என தமிழக அரசு 2011 ஆம் ஆண்டில் உத்தரவிட்டது. இதில் அனைத்து ஆசிரியர்களும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது. தேர்ச்சி பெறாதவர்களுக்கு வருடாந்திர அடிப்படையில் ஊதிய உயர்வையும் தமிழக அரசு நிறுத்தி வைத்திருந்தது. இந்த உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.