மேட்டூர் அருகே, மாணவிகளை கை, கால் அமுக்கிவிடச் சொன்ன புகாரின் பேரில் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியரைக் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் நகராட்சி, கொளத்தூர் அருகே உள்ள கருங்கல்லூரில் அரசுத் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 144 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ராஜா என்பவர், பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளை தனது அறைக்கு தனியாக அழைத்து மசாஜ் செய்து விடும்படியும், கை, கால்களை அமுக்கி விடும்படியும் கூறியதாக புகார்கள் எழுந்தன. சில மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும் சொல்கின்றனர்.
இதுகுறித்து மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் கூறி அழுதுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ஆக. 10ம் தேதி பள்ளிக்குத் திரண்டு சென்று முற்றுகையிட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்களும், பொதுமக்களும் பள்ளி முன்பு திரண்டதால் அப்பகுதியே களேபரமாகக் காணப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்க் கோட்டாட்சியர் தணிகாசலம், வட்டாட்சியர் முத்துராஜா, வட்டாரக் கல்வி அலுவலர் சின்னராசு ஆகியோர் பள்ளிக்குச் சென்று பெற்றோர்களை சமாதானப்படுத்தினர்.
ஆனாலும் பெற்றோர்கள் தரப்பில் கோபம் தணியவில்லை. அவர்கள் தொடர்ந்து தலைமை ஆசிரியருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பின்னர் சாலையில் அமர்ந்தும் போராட்டம் நடத்தினர். இதனால் மேட்டூர் - மைசூரு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தக்கூடும் அபாயம் இருந்ததால் அவருக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. அப்போது சிலர் கற்கள், செருப்புடன் தலைமை ஆசிரியரின் அறையை நோக்கிச் சென்றனர். திடீரென்று கல் வீச்சிலும் ஈடுபட்டனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் தலைமை ஆசிரியர் ராஜாவை தனியாக ஒரு அறையில் வைத்துப் பூட்டினர்.
இந்நிலையில் மேட்டூர் காவல்துறை டி.எஸ்.பி. மரியமுத்து தலைமையில் கூடுதலாக காவல்துறையினர் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டனர். வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை, காவல்துறை அலுவலர்கள் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதையடுத்து சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதன்பிறகு தலைமை ஆசிரியர் ராஜாவை மேட்டூர் மகளிர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். முதல்கட்ட விசாரணையில், மாணவிகளிடம் மட்டுமின்றி உடன் பணியாற்றி வரும் பெண் ஆசிரியர்கள் சிலரிடமும் தலைமை ஆசிரியர் ராஜா பாலியல் ரீதியாக அத்துமீறியிருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் அளித்த புகார்களின் பேரில், தலைமை ஆசிரியர் ராஜா மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.