இந்தியா முழுவதும் கரோனா தாக்கம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக ஒரு லட்சத்தைக் கடந்து தினசரி தொற்று எண்ணிக்கைப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் 1.79 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கரோனா பாதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தினசரி 2 ஆயிரம் என்ற அளவிற்கு கூடுதலாக பதிவாகிவருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான நபர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு விதித்து வருகிறது. இன்றைக்குகூட தமிழக முதல்வர் கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பாக மருத்துவர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார்.
இந்நிலையில் கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒருபகுதியாக தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்த இரண்டு டோஸ் போட்டவர்கள் மட்டுமே புறநகர் ரயிலில் பயணிக்கலாம் என்ற கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி டிக்கெட் வழங்குபோதே பயணிகளின் தடுப்பூசிக்கான சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு அதன் பிறகே டிக்கெட் வழங்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் எழும்பூர், சென்டர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இந்தக் கட்டுப்பாடு இன்று காலை முதலே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.