![Theft of repair machine.. incident in Tiruppur](http://image.nakkheeran.in/cdn/farfuture/LX6EO3LIROLUVHkvgntxcI9W9JZInH952L12pbcdLKg/1632148424/sites/default/files/inline-images/0341.jpg)
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள மூலனூர்- கன்னிவாடி பகுதியில் தென்காசி மாவட்டம் செங்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (வயது 33) தனியார் நிறுவனத்தில் ஸ்டோர் மேனேஜ்மென்ட் பணியாளராக பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் கடந்த ஜூலை 21-ஆம் தேதி அவர் பணியாற்றி வந்த நிறுவனத்திலிருந்து காற்றாடி பழுது பார்க்கும் இயந்திரத்தைத் திருடிச் சென்று விட்டதாகக் கண்ணன் மீது தர்ம ராஜ் என்பவர் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரின் பேரில் மூலனூர் காவல் நிலைய ஆய்வாளர் செல்வம் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசன், தலைமைக் காவலர்கள் கார்த்திக், மதியழகன், ராமர், ராமலிங்கம் ஆகியோர் தனிப்படை அமைத்து குற்றவாளியைத் தேடி வந்தனர்.
இந்தநிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் கண்ணன் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்து உள்ளார். அப்போது போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் காற்றாடி பழுது நீக்கும் இயந்திரத்தைத் திருடிச் சென்ற கண்ணன் இவர் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதிக்குச் சென்று அவர் வீட்டின் அருகே மறைத்து வைத்திருந்த காற்றாடி பழுது நீக்கும் எந்திரத்தையும் திருட்டுக்குப் பயன்படுத்திய மஹிந்திரா பொலிரோ வாகனத்தையும் கைப்பற்றினர்.
பிறகு போலீசார் கண்ணனிடம் விசாரித்ததில், தான் பணியாற்றிய நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வேறொரு தனியார் காற்றாடி நிறுவனத்திடம் பெரும் தொகை பெற்றுக்கொண்டு நண்பர்கள் உதவியுடன் திருட்டில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் இதே திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இரு நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கைப்பற்றிய காற்றாடி பழுது நீக்கும் இயந்திரத்தின் பதிப்பு 8 லட்சம் ரூபாய் ஆகும். கண்ணனை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து முழு உடல் பரிசோதனை மேற்கொண்ட போலீசார் அதன் பிறகு காங்கேயம் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.