தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நீலகிரியில் அரசு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் அரசு தேயிலைத் தோட்டங்கள் நீலகிரி மற்றும் வால்பாறையில் செயல்பட்டு வரும் நிலையில் அரசு தேயிலைத் தோட்டங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது போனஸ் வழங்கப்பட்டு வந்தது. சூழ்நிலைக்கு ஏற்றார்படி 20 சதவீதமும் முதல் 8.33 சதவீதம் வரை போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு 20% போனஸ் வழங்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டும் 20% போனஸ் கிடைக்கும் என தொழிலாளர்கள் காத்திருந்தனர். அதன் தற்போது வரை போனஸ் அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனால் கடந்த சில தினங்களாகவே போனஸ் வேண்டும் என பணிக்கும் செல்வதற்கு முன்பாகவே தொழிலாளர்கள் அடையாள போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை முதல் பணிக்கு செல்லாமல் முழு நேரமாக தோட்ட மேலாளர் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்குச் செல்லாமல் போனஸ் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.