கடலூர் மாவட்டம் நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் உள்ள இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுகுமார்(35), வின்சென்ட்(40). இவர்கள் இருவரும் சகோதரர்கள். சம்பவத்தன்று நெய்வேலி அம்ரிமேடு, கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைக்கு மது வாங்கிக் குடிக்க இருவரும் சென்றுள்ளனர். அங்கு மது பாட்டில்கள் விற்பனை செய்து வந்த பணியாளரிடம் பணம் கொடுத்து சகோதரர்கள் இருவரும் மது பாட்டில் வாங்கி உள்ளனர்.
அப்போது கடை விற்பனையாளர் பாட்டிலுக்கு உரிய விலையை விட கூடுதலாக பத்து ரூபாய் தருமாறு கேட்டுள்ளார். இதைக் கேட்டு சகோதரர்கள் இருவரும் ஆத்திரமடைந்த நிலையில் கடை விற்பனையாளருக்கும், சகோதரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அங்கு குடித்துவிட்டுக் கீழே கிடந்த காலி மது பாட்டில்களை எடுத்து சகோதரர்கள் இருவரும் கடையின் மீது சரமாரியாக வீசி ரகளையில் ஈடுபட்டனர்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த டாஸ்மார்க் கடை விற்பனையாளர் உடனடியாக நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் ரகளையில் ஈடுபட்ட சகோதரர்கள் இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதிக விலை கேட்டதால் கோபமடைந்த சகோதரர்கள் டாஸ்மாக் கடை மீது சரமாரியாக பாட்டில் வீசிய சம்பவம் நெய்வேலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.