Skip to main content

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் சஸ்பெண்ட்

Published on 19/07/2023 | Edited on 19/07/2023

 

Tasmac shops suspended for charging extra

 

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக கட்டணம் வசூலித்தால் சஸ்பெண்ட் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

 

அண்மைக் காலமாகவே டாஸ்மாக் கடைகளில் மதுபானம் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்யும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கத் தமிழக அரசு டாஸ்மாக்கை கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

இந்நிலையில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மேலாண் இயக்குநர் விசாகன்  தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக 10 ரூபாய் அல்லது அதற்கு மேல் விலை வைத்து மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்ற கடைப் பணியாளர்களின் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொண்டு தற்காலிக பணியிடை நீக்கம் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

முன்னதாக கடந்த 10 ஆம் தேதி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மதுக்கடைகளுக்குக் கண்காணிப்பு கேமரா பொருத்துவது; கணினி வழி ரசீது வழங்குவது; கட்டுப்பாட்டு அறை அமைப்பது; மாவட்ட வாரியாக வாட்ஸ் அப் குழு அமைப்பது; கூடுதல் விற்பனைக்கு மது விற்பதைத் தவிர்ப்பது; புதிய அளவுகளில் மது விற்பனை செய்வது குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்