தமிழ்நாடு, புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தல்கள் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளையுடன் (04/04/2021) பிரச்சாரம் ஓய்கிறது. இதனால் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மற்றொருபுறம் தேர்தலை சிறப்பாக நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் பாதுகாப்பு பணிகளில் மாநில காவல்துறையினருடன் இணைந்து துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் நாளை (04/04/2021) முதல் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரியில் இன்றிரவு 10.00 மணி முதல் ஏப்ரல் 7ஆம் தேதி காலை வரை மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.