டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் வனப்பகுதிகள் மற்றும் மலைப்பிரதேசங்களில் அமைந்துள்ள சுற்றுலா தளங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காலி மதுபானப் பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் படி மதுபானத்தின் விலையை விடக் கூடுதலாக பத்து ரூபாய் செலுத்தி மதுபானப் பாட்டில்களை வாங்கிவிட்டு அதன் பின்னர் காலி மதுபானப் பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திரும்ப ஒப்படைக்கும்போது கூடுதலாக வசூலிக்கப்பட்ட 10 ரூபாயைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்பதாகும்.
இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பரத சக்ரவர்த்தி, சதிஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (05.07.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “இந்த திட்டத்தின் மூலம் அரசுக்கு 250 கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்டறிந்த நீதிபதிகள் தமிழகத்தில் ஒரு நாளைக்கு எத்தனை மதுபானப்பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு டாஸ்மாக் நிர்வாகம் சார்பில், “ஒரு நாளைக்குச் சராசரியாக 70 லட்சம் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதோடு இத்திட்டம் மூலம் கணிசமான வருவாயும் ஈட்டமுடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது டாஸ்மாக் நிறுவனம் சார்பில், “தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதம் முதல் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.