ஈரோடு மாவட்டம் புளியம்பட்டிக்கு அருகே உள்ளது எரங்காட்டுபாளையம் ஊராட்சி. இந்தப் பகுதியில் அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடைக்கு வந்த மது பிரியர் ஒருவர், 270 ரூபாய் கொடுத்து 130 ரூபாய் விலையுடைய இரண்டு மது பாட்டில்களைக் கேட்டுள்ளார். அதற்கு, அந்த கடையில் இருந்த ஊழியர், அவர் கேட்ட இரண்டு பாட்டில்களையும் கொடுத்துள்ளார்.
ஆனால், அதனை வாங்கிய வாடிக்கையாளர், “ஒரு பாட்டில் 130 ரூபாய் தான? பேலன்ஸ் 10 ரூபாவ கொடுங்க” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது, அதற்குப் பதிலளித்த டாஸ்மாக் ஊழியர், “ஏங்க.. முன்னாடி மாதிரி 10 ரூபாய் எடுக்கிறதில்லை. இப்போலாம் வெறும் 5 ரூபாய் மட்டும்தான் எடுக்கிறோம்” எனவும் பதிலளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரிடம் பேசிய மது பிரியர், “அமைச்சர்ல இருந்து எல்லாருமே பாட்டிலுக்கு மேல ஒரு ரூபாய் கூட வாங்கக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க. ஆனா, நீங்க எதுக்கு திரும்ப காசு கேக்குறீங்க” என அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் கடுப்பான ஊழியர், “ஏங்க.. கரெக்டா எப்படிங்க பாட்டில் விலையை அப்படியே கொடுக்க முடியும்? இந்த கடைக்கு வாடகை இருக்கு? கரண்ட்டு பில்லு இருக்கு? எனக் கூறிவிட்டு இவ்வளவு பிரச்சினை இருக்கும்போது எப்படி அதே விலைக்கு கொடுக்க முடியும்” எனப் புதுக் கதையைக் கூறியிருக்கிறார். ஆனால், இதற்கெல்லாம் அசராத அந்த மது பிரியர், “ஐந்து ரூபாவா இருந்தாலும் அது என்னோட பணம். ஒழுங்கா ரெண்டு பாட்டிலுக்கு வாங்குன என்னோட 10 ரூபாவ கொடுத்துடு” எனக் கோபமாக பேசினார். ஆனால் அப்போதும் அந்தக் கடைக்காரர் மீதியைத் திருப்பிக் கொடுக்காமல், இப்போ இதையெல்லாம் கேட்டு வீடியோ எடுத்து என்ன பண்ண போற...” எனக் கூறி, “என்ன வேணாலும் பண்ணிக்கோ போயா.. என திமிராக கூறியிருக்கின்றார்.
ஏற்கனவே டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வைத்து விற்கப்படுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், அருகில் நின்ற மது பிரியர்களும், அவர் கேட்பது சரிதானே மீதி பத்து ரூபாயைத் திருப்பிக் கொடுங்கள் எனக் கொந்தளித்தனர். இத்தகைய சூழலில், மது பிரியருடன் டாஸ்மாக் ஊழியர் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகளை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அதன்பிறகு, அந்த வீடியோவை உடனடியாக சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கின்றனர். இதனையடுத்து, இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.