முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மறைந்து ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து, அவர் மறைந்த நாளான இன்று சென்னையில் கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் சிலை திறப்பு விழா நடைபெற்றது. கலைஞர் அமர்ந்து எழுத்தோவியம் தீட்டுவது போன்று 6.2 அடி அகலம், 6.5 அடி உயரத்தில் நிறுவப்பட்ட வெண்கல சிலையை மேற்கு வங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்.
இந்த சிலைதிறப்பு நிகழ்வை அடுத்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின், மம்தா பானர்ஜி, நாராயணசாமி ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர். அதனையடுத்து ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி,
தமிழர்கள் புலியை போன்றவர்கள். நீங்கள் உங்கள் மாநிலத்திற்கு குரல் கொடுப்பது பெருமையாக உள்ளது. எந்த முடிவு எடுத்தாலும் மாநில மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். கலைஞர் கருணாநிதி வழியில் நின்று நாட்டில் நிலவும் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடுவோம். தமிழகத்தின் தந்தை போன்று விளங்கியவர் கலைஞர் கருணாநிதி. மாநில உரிமைகளைப் பாதுகாக்க தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் கலைஞர். எதிர்காலத்தில் பெரும் சவால்களை சந்திக்க வேண்டிய பொறுப்பு இளைஞர்களுக்கு தற்போது உள்ளது. எப்போதும் ஜெய் பெங்கால் என்று கூறுவேன் தற்போது ஜெய் தமிழ்நாடு என்று கூறுகிறேன். தமிழில் வணக்கம் என்ற வார்த்தையை கூறுவதற்கு எனக்கு மிகவும் பிடிக்கும் அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் கூறி உரையை நிறைவு செய்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.