நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவுகள் காலையிலிருந்தே பரபரப்புகள். அதே சமயம் குளறுபடி மோதலுக்கும் குறைவில்லை.
தென்காசி மாவட்டத்தின் கடையநல்லூர் நகராட்சியின் 17வது வார்டில் அரசியல் கட்சிகளிடையே சகிலா பானு என்கிற பெண் சுயேட்சை வேட்பாளரும் போட்டியிலிருப்பவர். வாக்குப் பதிவு அன்று வாக்கு இயந்திரத்திலும் போட்டியிடும் வேட்பாளர்கள் அரசு பட்டியல் விளம்பரத்திலும் சகிலாபானு என்பதற்குப் பதிலாக சசிகலா பானு என்று பதிவு செய்யப்பட்டிருந்தது கண்டு அதிர்ந்திருக்கிறார் சகிலாபானு. வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் பெயர் குழப்பத்தால் வாக்காளர்கள் யோசிக்க சகிலாபானுவின் கணவர் சுலைமான், வேட்பாளர் பெயர் மாறுதலைச் சுட்டிக்காட்டி வாக்குப்பதிவை நிறுத்திவைக்கும்படி பூத் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ய, விவகாரம் பரபரப்பாகியிருக்கிறது. இந்த வார்டில் சசிகலா எனும் இன்னொரு வேட்பாளரும் இருந்ததால் இந்தத் தவறு ஏற்பட்டிருக்கிறது.
இதனால் வாக்குப்பதிவும் நிறுத்தப்பட, தகவலறிந்து ஸ்பாட்டுக்கு வந்த தேர்தல் அதிகாரியும், கடையநல்லூர் நகராட்சியின் ஆணையருமான ரவிச்சந்திரன் சசிகலா பானு என்ற பெயரை நீக்கிவிட்டு சகிலாபானு என்று மாற்றிய பிறகே, நிறுத்தி வைக்கப்பட்ட வாக்குப்பதிவு தொடர்ந்திருக்கிறது.
அதே மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகராட்சியின் 5வது வார்டு 8 தெருக்களை உள்ளடக்கிய பெரிய வார்டு. தேர்தல் தோறும் வழக்கம் போல் ஆண்கள் பெண்கள் இரு பாலருக்கும் தனித்தனி வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இம்முறை வழக்கப்படி தனித் தனி பூத் வைக்கப்படாமல் ஆண்களும் பெண்களும் ஒரே பூத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டதால் கூட்டம் காரணமாக வாக்குப்பதிவு செய்வதற்கு நேரம் பிடித்திருக்கிறது. இதனால் அந்த பூத்தில் வாக்குப்பதிவின் சதவிகிதம் குறைந்திருக்கிறது. இதே போன்ற சூழல்கள் தான் ஒரு சில வார்டுகளில்.
அதே சமயம் நான்கே தெருக்களை உள்ளடக்கிய 13 மற்றும் 16வது பூத்களில் முறைப்படி ஆண்கள் பெண்களுக்கு என தனித்தனி பூத் வைக்கப்பட்டிருப்பதையும் நாம் சுட்டிக்காட்டி வாக்குப்பதிவில் தாமதமேற்படுவது தொடர்பாக தென்காசி மாவட்டத் தேர்தல் அதிகாரியான கலெக்டரின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் அவரது தொடர்பு நம்பரைக் கேட்பதற்காக அவரது அலுவலக, பத்திரிக்கையாளர்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் வைத்திருக்கிற மக்கள் தொடர்புத் துறை அலுவலகமான பி.ஆர்.ஓ. அலுவலகத்தின் ஏ.பி.ஆர்.ஓ.வான ராம சுப்பிரமணியனைத் தொடர்பு கொண்ட போது, அவரோ கலெக்டர் மொபைல் நம்பர் எனக்குத் தெரியாதே என்று சொல்லிவிட்டார். விடாமல் தொடர்ந்து, முயற்சிகளை மேற்கொண்ட நாம், சங்கரன்கோவில் நகராட்சியின் ஆணையரும் நகர தேர்தல் பொறுப்பாளருமான சாந்தியிடம் தெரிவித்தபோது, அவர் தாமதமில்லாமல் உரிய பணியாளர்களை அனுப்பி, குறைகளை நிவர்த்தி செய்தார்.
தூத்துக்குடியில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைக் கொண்ட மிகப் பெரிய 13வது வார்டில் அ.தி.மு.க.வில் அன்னபாக்கியமும், தி.மு.க. தரப்பில் ஜாக்குலின் ஜெயாவும் போட்டியிலிருக்கின்றனர். இவர்களிருவருமே அந்த வார்டிலிருக்கும் ரத்த உறவுகளைக் கொண்ட பெரியகுடும்பம். இந்தத் தேர்தலில் அதே வார்டில் நேருக்கு நேர் மோதினர்.
வாக்குப்பதிவின் முடிவு நேரத்தின் போது இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ரீதர், ராஜா இருவரும் போதையில் வாக்குப்பதிவுப் பகுதியில் ஒரு சிலரிடம் தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால் விவகாரம் கிளம்பியபோது அதனை மூர்த்தி என்பவர் தட்டிக் கேட்டதில் இவர்களுக்குள் கைகலப்பாகி அடிதடியாகியிருக்கிறது. காயமடைந்த ஸ்ரீதர், ராஜா இருவரும் மருத்துவமனையில் அட்மிட் ஆனதில், சிகிச்சையை அடுத்து ராஜா வீடு திரும்ப ஸ்ரீதரோ ஐ.சி.யூ.வில் வைக்கப்பட்டுள்ளாராம். அடித்தவரும் அடிபட்டவர்களும் ஒரே ரத்த பந்தம் என்பதால், இந்த மோதல் சம்பவத்தைப் பெரிது படுத்தாமல் கமுக்கமாக வைத்துக் கொண்டார்களாம்.
தவிர தூத்துக்குடி மாநகராட்சி வார்டுகளில் ஒரே தரப்பின் வைட்டமின் பாய்ச்சல் வீரியம் காண, எதிர் சைடில் வைட்டமின் சத்துக் குறைந்ததால் உச்சம் போக வேண்டிய வாக்குப்பதிவு 64 சதவிகிதத்தோடு நின்றுவிட்டது என்கிறார்கள்.