தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு இந்த கல்வி ஆண்டிலிருந்தே பின்பற்றப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதற்கு காரணம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த முயற்சிதான்.
இந்த நிலையில், ஸ்டாலினுக்கு பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்திருக்கும் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம், இட ஒதுக்கீடு கிடைக்க உதவிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வழக்கை தொடர்ந்து நடத்தி வெற்றிபெற வைத்த திமுக எம்.பி.யும் வழக்கறிஞருமான வில்சனுக்கும் நன்றியை தெரிவித்திருக்கிறது.
மேலும், நாடு முழுவதிலும் உள்ள ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்டோருக்குமான சமூக நீதியை தமிழ்நாடு மீண்டும் ஒருமுறை பெற்றுத்தந்துள்ளது. சமூக நீதிக் காவலர்களான முன்னாள் பிரதமர் வி.பி.சிங், முன்னாள் முதல்வர் கலைஞர், மண்டல் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் மண்டல் ஆகியோருக்கு நன்றியை தெரிவிக்கிறது மருத்துவ அலுவலர்கள் சங்கம்.