பெரும் திரளாக கலந்து கொண்டு முழு அடைப்பு வெற்றி பெற காங்கிரஸ் ஒத்துழைக்கும் என்றும், தமிழகமே ஸ்தம்பித்தது என்கிற நிலையை ஏற்படுத்தி, போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி அதை செயல்படுத்துவதற்கு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் ஆணையிட்ட பிறகும், அதை மறுதலித்து தீர்ப்பை முடக்குகிற வகையில் கடந்த அக்டோபர் 2016 ஆம் ஆண்டில் மத்திய பா.ஜ.க. அரசு, தலைமை வழக்கறிஞர் மூலமாக செயல்பட்டதை அனைவரும் அறிவார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பை அன்றைக்கு ஏற்றுக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டிருந்தால் காவிரி மேலாண்மை வாரியம் அன்றைக்கே அமைக்கப்பட்டிருக்கும்.
அதை அமைக்கவிடாமல் அன்று தடுத்த பா.ஜ.க. அரசு தான் இன்றைக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்பாட்டுக்கு வர விடாமல் தடுத்து வருகின்றன.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள கூட்டாட்சித் தத்துவத்திற்கு விரோதமாக மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினையில் காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் தீர்ப்புகளுக்கு உலை வைக்கிற வகையில் மத்திய பா.ஜ.க. அரசு, அரசியல் ஆதாய நோக்கத்தோடும், மாற்றாந்தாய் மனப் பான்மையோடும் செயல் பட்டு வருவதை தமிழக மக்களிடையே தோலுரித்துக் காட்ட வேண்டிய பொறுப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இருக்கிறது.
அதை நிறைவேற்றுகிற வகையில் முதற்கட்டமாக வருகிற 5-ந்தேதி அன்று நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டம் என்பது தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புப் போராட்டமாக அமைந்து மத்திய மாநில அரசுகளுக்கு பாடம் புகட்டுகிற வகையில் வெற்றிகரமாக அமைவதற்கு காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டுமென அன்போடு வேண்டுகிறேன்.
இப்போராட்டம் வெற்றிகரமாக அமைய விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பினரின் ஆதரவை திரட்டுவது அவசியமாகும்.
தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்தை ஒட்டி தி.மு.க. தலைமையில் நடைபெறுகிற அனைத்து நிகழ்வுகளிலும் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று வெற்றி பெற ஒத்துழைக்க வேண்டும். இதன் மூலம் தமிழகமே ஸ்தம்பித்தது என்கிற நிலையை ஏற்படுத்தி, போராட்டம் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.