Skip to main content

நாளொன்றுக்கு 500 பேருக்கு டோக்கன்!- டாஸ்மாக் நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல்! 

Published on 15/05/2020 | Edited on 15/05/2020

 

tamilnadu tasmac chennai high court


நாளொன்றுக்கு 500 பேருக்கு மட்டுமே டோக்கன் முறையில் மதுபானம் விற்க திட்டமிட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. 

தமிழகத்தில் 41 நாட்கள் ஊரடங்குக்குப் பின், கடந்த 7- ஆம் தேதி மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், மதுக்கடைகளைத் திறக்க அரசு நிபந்தனைகளுடன் சேர்த்து, மேலும் சில நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டிருந்தது. பின், இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் மூட உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல்செய்த மேல் முறையீட்டு மனு, இன்னும் விசாரணைக்கு வரவில்லை.


இந்நிலையில், டாஸ்மாக் தொடர்பான அனைத்து வழக்குகளும், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் பி.என்.பிரகாஷ் ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன. 

இந்த வழக்குகள் தொடர்பாக, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் கிர்லோஸ்குமார் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மதுபான விற்பனைக்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், ஆன்லைன் முறையில் மது விற்பனை செய்வது குறித்து பரிசீலிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசு அறிவித்த விதிமுறைகளின்படி, தமிழகத்தில் சென்னை தவிர பிற பகுதிகளில், சமூக விலகலைப் பின்பற்ற வேண்டும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு குறித்து அனைத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. 

இதுதவிர, மொத்த விற்பனை கூடாது எனவும், ஒருவருக்கு 2 பாட்டில்களுக்கு மேல் விற்பனை செய்யக் கூடாது எனவும், மூன்று நாட்களுக்கு ஒரு முறையே ஒருவருக்கு மது விற்பனை செய்ய வேண்டும் எனவும், மது வாங்குபவரின் பெயர், முகவரி மற்றும் ஆதார் எண்களைப் பதிவு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளைப் பின்பற்றவும்  அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றவில்லை எனக் கூறி, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.  

 

 


மதுபானம் விற்பனை செய்வதற்கு ஆதார் விவரங்களைக் கேட்பது என்பது தனிநபர் உரிமையை மீறிய செயல் ஆகும். டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒரே இரவில் அதனை மேற்கொள்ள முடியாது. தமிழகத்தில் மொத்தமுள்ள 5,338 மதுக்கடைகளில், 850 கடைகளில் மட்டும் மாற்று முறையில் பணம் செலுத்தும் கருவிகள் உள்ளன. அதுவும், பெரும்பாலும் சென்னையிலேயே இருக்கின்றன. டிஜிட்டல் பண பரிவர்த்தனை வசதி 58 கடைகளில் மட்டும் இருக்கிறது. 

டெபிட் கார்டு, யுபிஐ போன்ற ஆப்களின் மூலம் மின்னணு பரிவர்த்தனைக்காக வங்கிகளுடன் டாஸ்மாக் நிர்வாகம் ஆலோசனை நடத்தியுள்ளது. இதற்கான கருவிகளைக் கொள்முதல் செய்வதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. கரோனா ஊரடங்கு காரணமாக அப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. செப்டம்பர் மாதத்திற்குள் இந்தப் பணிகள் நிறைவடையும்.  

 


41 நாட்கள் ஊரடங்கு முடிந்து கடைகள் திறக்கப்பட்ட போது, பல மாநிலங்களில் அதிக கூட்டம் இருந்தது. அதுபோல, தமிழகத்தில் அதிக கூட்டம் காணப்பட்ட கடைகளில் காவல் துறையினர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். சில இடங்களில் கடைகள் மூடப்பட்டன. அளவுக்கதிகமாகக் கூட்டம் கூடியதால் 12 கடைகளில் விற்பனை நிறுத்தப்பட்டது.  

சமூக விலகலை உறுதி செய்வதற்காக ஒரு மணி நேரத்திற்கு 70 டோக்கன்களும், ஒரு நாளைக்கு 500 டோக்கன்களும் வழங்கப்பட்டு, அவர்களுக்கு மட்டுமே மதுபானங்கள் விற்கத் திட்டமிடப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்