காவேரி தண்ணீர் திறந்து சில நாட்களுக்குள் மேட்டூர் அணை நிரம்பியதால் காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக்குழு எந்த ஆய்வும் செய்ய வராத நிலையில் பாதுகாப்பு கருதி முதலமைச்சர் தண்ணீர் திறக்கப்படும் என்று திறந்துவிட்டார். அந்த தண்ணீர் கல்லனை வந்தடைந்த நிலையில், தேக்கி வைத்தால் ஆபத்து என்று கடந்த 22ந் தேதி 7 அமைச்சர்கள் பாசனத்திற்காக திறந்துவிட்டார்கள்.
தண்ணீர் திறந்த நாளிலேயே திருச்சி, தஞ்சை, போன்ற காவேரிக் கரையோர மக்களுக்கு மாவட்டஆட்சியர்கள் எச்சரிக்கையும் விடுத்தனர். 22ந் தேதி திறக்கப்பட்ட கல்லனை தண்ணீர் கடைமடை பகுதிக்கு 26ந் தேதியான இன்று வந்தடைந்த நிலையில் இன்று இரவே கடலில் கலக்கப்போகிறது. ஆனால் எந்த ஊரிலும் விவசாயப்பணிகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில் உள்ளது.
இந்த நிலையில் கரைபுரண்டு ஓடிவரும் காவேரி தஞ்சை பிள்ளையார்பட்டி அருகே கல்விராயன்பேட்டை கிராமத்தில் பலமிலந்திருந்த ஆற்றுக்கரை உடைந்து வயல்வெளியில் தண்ணீர் சீறிப்பாய்ந்தோடியது. மணல் மூட்டைகள் வைத்து உடைப்பை அடைக்கும் முயற்சி நடந்தது. அந்தப் பகுதியில் குடியிருப்புகள் இல்லாததால் பெரும் ஆபத்துகள் தடுக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் திறப்புக்கு முன்பே கரை பாதுகாப்பு குளங்கள் ஏரிகள் சீரமைப்பை கண்டுகொள்ளாத அதிகாரிகளின் கவனக்குறைவே கரை உடைப்புக்கும் காரணம் என்கிறார்கள் விவசாயிகள். மேலும் பல இடங்களில் பலமில்லாத கரைகள் உள்ளது. அந்த இடங்களை கண்டறிந்து கரையை பலப்படுத்த வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.