Skip to main content

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை திணறடித்த ஐ.பி...!

Published on 13/01/2020 | Edited on 13/01/2020

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் என இரண்டு ஒன்றியங்கள் உள்ளன. ஆத்தூர் ஒன்றியத்தில் 22 கிராம ஊராட்சிகளும், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் 24 கிராம ஊராட்சிகளும், ஆத்தூர் ஒன்றியத்தில் 17 ஒன்றியக்குழு வார்டுகளும், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் 18 ஒன்றியகுழு வார்டுகளும் உள்ளன.

 

local body election-dmk-admk-I. Periyasamy

 



நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றிபெற்று சாதனை படைத்தது. குறிப்பாக 40 வருடங்கள் இல்லாத சாதனையாக ஆத்தூர் ஒன்றியகுழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளையும், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் ஒன்றியகுழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்றியது. இது தவிர ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள 4 மாவட்ட கவுன்சிலர் பதவிகளையும் கைப்பற்றி மாபெரும் சாதனை படைத்தது.

இதுதவிர ரெட்டியார்சத்திரம் மற்றும் ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள 46 கிராம ஊராட்சிகளில் 40 கிராம ஊராட்சிகளை திமுக ஆதரவு தலைவர்களே கைப்பற்றியுள்ளனர். ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் வார்டு எண் 20ல் திமுக சார்பாக போட்டியிட்ட வார்டில்  போட்டியிட்ட பாஸ்கரன் என்பவர் முன்னாள் அதிமுக ஒன்றியக்கழு தலைவராக இருந்த பி.கோபியை விட 6 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 11ம் தேதி நடைபெற்ற மாவட்ட ஊராட்சிக்குழு தலைவருக்கான தேர்தலில் திமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் இ.பெரியசாமியின் பரிந்துரையின் பேரில் பாஸ்கரன் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதுபோல ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஒன்றிய செயலாளர் ப.க.சிவகுருசாமியும், துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராஜேஸ்வரியும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதுபோல ஆத்தூர் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மு.மகேஸ்வரியும், துணை தலைவர் பதவிக்குபோட்டியிட்ட ம.ஹேமலதாவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொகுதியில் எவ்வித பிரச்சனையும் இன்றி திமுக ஆதரவு ஊராட்சி மன்ற தலைவர்களும், துணை தலைவர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

 



உள்ளாட்சி தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு தொகுதி முழுவதும் ஆய்வு செய்த திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இ.பெரியசாமி சக்கரவியூகம் மற்றம் ஐபி வியூகத்தை காண்பித்து ஆத்தூர் தொகுதியை திமுகவின் கோட்டையாக மாற்றினார். இதனால் ஆத்தூர் தொகுதியில் அதிமுகவினர் அதிர்ச்சியில் உள்ளனர். ஆத்தூர் ஒன்றியத்தில் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட மு.மகேஸ்வரி மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட ம.ஹேமலதாவுடன் திமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள், திமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் இ.பெரியசாமியிடம் வாழ்த்து பெறுவதற்காக அவர் இல்லத்திற்கு வந்திருந்தனர்.

அவர்கள் மத்தியில் பேசிய இ.பெரியசாமி, "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  தலைமையில் நல்லாட்சி மலர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடுதான் உள்ளாட்சிதேர்தலில் உங்களுக்கு வாக்களித்து உங்களை வெற்றிபெற வைத்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் நீங்கள் வெற்றிபெற்ற வார்டில் பொதுமக்களுக்கு நலப்பணிகளை செய்யவேண்டும்" என்று அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி, திமுக சட்டமன்ற கொறடா அர.சக்கரபாணி, ஒன்றிய செயலாளர்கள் ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பிள்ளையார்நத்தம் முருகேசன், மேற்கு ஒன்றிய செயலாளர் ராமன், திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணலூர் மணிகண்டன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நா.சிந்தாமணி, எம்.காணிக்கைசாமி, கா.செல்வி, ஐ.பிளாசி, செ.காணிக்கைராஜ், பெ.பாப்பாத்தி, ம.ஜோதி, ஆ.அழகுசரவணக்குமார், மு.நிச்சிதா, சே.முத்துமாரி, எம்.நாகவள்ளி மற்றும் பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், திமுக பிரமுகர் ரெக்ஸ், கும்மம்பட்டி விவேகானந்தன், பிள்ளையார்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ஐ.பி.பாசறை உலகநாதன் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.  
 

சார்ந்த செய்திகள்