திருவாரூர் பழைய பேருந்து நிலையத்திற்கு வழக்கம்போல் பேருந்துகள் வந்துசெல்ல வேண்டும் என வலியுறுத்தி வர்த்தகர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் - மயிலாடுதுறை பிரதான நெடுஞ்சாலை ஓரத்தில் கடந்த 50 ஆண்டுகளாக பேருந்து நிலையம் இருந்துவருகிறது. வெளிவட்ட சாலைகளோ, மாற்றுப்பாதைகளோ இல்லாமல் போனதால் பேருந்து நிலையத்தினை கடந்தே மற்ற கனரக வாகனங்களும் செல்லும் நிலை இருக்கிறது. இதனால் நேரிடும் விபத்துகளை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்கிற குரல் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து கோரிக்கையாக எழுந்தது.
அதனை தொடர்ந்து கடந்த 2010 ஆம் ஆண்டு திருவாரூர் பகுதியில் புதிய பேருந்து நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு, பிறகு கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு, நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு பணிகள் முடிவடைந்து, கடந்த மார்ச் மாதம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பின்னர் பழைய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை, தஞ்சை, மன்னார்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம் உள்ளிட்ட அனைத்து தடப்பேருந்துகளும் புதிய பேருந்து நிலையங்களுக்கு மட்டுமே செல்கிறது, அங்கிருந்து பழைய பேருந்து நிலையத்திற்கோ, ரயில் நிலையத்திற்கோ வருதற்கு வரும் மக்கள் நடந்தே செல்ல வேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளது. அதோடு பழைய பேருந்து நிலைய பகுதிகளில் செயல்பட்டு வந்த நூற்றுக்கணக்கான வர்த்தக நிறுவனங்களில் வர்த்தகமும் முழுமையாக பாதிக்கப்பட்டுவிட்டது என வர்த்தகர்கள் கவலையடைந்துள்ளனர்.
ஆகவே பழைய பேருந்து நிலையத்துக்கும் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வர்த்தகர்கள் மனு அளித்தனர். கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மக்களவைத் தேர்தல் வரை பழைய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் இயக்கபட்டன. தேர்தலுக்குப் பிறகு பேருந்துகள் இயங்கவில்லை. புதிய பேருந்து நிலையத்துக்கு மட்டுமே பேருந்துகள் வந்து செல்கின்றன.
இதனால் விரக்தியடைந்த வர்த்தகர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பழைய பேருந்து நிலையத்துக்கும் பேருந்துகளை இயக்க வேண்டும் என வலியுறுத்தி திருவாரூர் நகர தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த திருவாரூர் டிஎஸ்பி நாகராஜன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானமடைந்த வர்த்தகர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
இதுகுறித்து திருவாரூரை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கூறுகையில், "பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்ல சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் போகவேண்டும். அங்கிருந்து மக்கள் வெயிலிலும், நள்ளிரவு நேரத்திலும், நடந்தே வரும் சூழல் ஏற்படுகிறது. பாதுகாப்பில்லாத நிலையும் உருவாகியுள்ளது. அதோடு புதிய பேருந்து நிலையத்தை சுற்றி வர்த்தகங்கள் இல்லை. பழைய பேருந்து நிலையத்தில் சுற்றியே வர்த்தகங்கள் இருக்கிறது. வர்த்தகமும் முற்றிலும் பழகிவிட்டது. அதோடு ரயில்வே நிலையத்திற்கு வரும் மக்கள் ஆட்டோவிலோ, டாக்ஸியிலோ அதிக வாடகை கொடுத்து செல்லும் நிலையே உள்ளது. ஆகவே தஞ்சாவூர் திருச்சி கும்பகோணம் உள்ள நகரங்களில் எப்படி பழைய பேருந்து நிலையதிற்கும், புதிய பேருந்துநிலையத்திற்கும் செல்கிறதோ, அதுபோல் திருவாரூரிலும் பேருந்துகளை இயக்க செய்ய வேண்டும். இதனை செய்யவில்லை என்றால் பெரும் போராட்டம் நடத்துவோம்" என்கின்றனர்.