தமிழகத்தில் எப்போது பள்ளிகளைத் திறக்கலாம் என்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் இரண்டாவது நாளாக கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன.
2020 - 21 கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை நடத்தலாமா? என்பது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொங்கல் விடுமுறைக்குப் பிறகு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்குப் பள்ளிகளைத் திறக்கலாமா? வேண்டாமா? என்று அந்தந்த மாணவர்களின் பெற்றோரிடம் கருத்துகள் கேட்க அரசு முடிவுசெய்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் எப்போது பள்ளிகளைத் திறக்கலாம் என்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் இரண்டாவது நாளாக இன்று (07/01/2021) கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன. பள்ளிக்கு வர முடியாத மாணவர்களின் பெற்றோர்களிடம் வாட்ஸ் ஆப் மற்றும் இணைய வழியில் கருத்துகள் பெறப்பட்டு வருகின்றன.
இன்று மாலை வரை பெற்றோர்களிடம் கருத்துகள் பெறப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களிடம் பெற்றோர்கள் அளித்துள்ள கருத்துகளைப் பள்ளிகள் வழங்கும். அதன் தொடர்ச்சியாக பள்ளிக்கல்வித்துறைக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் பெற்றோர்களின் கருத்துக்களை அனுப்புவர். அதன் அடிப்படையில் தமிழக அரசு ஆலோசனை செய்து, பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பை வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளைத் திறக்கலாம் என கருத்துத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.