புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை ஏழை விவசாயிகள் வளர்க்கும் ஆடுகள் திருடு போனால் காவல் நிலையம் வந்து புகார் கொடுப்பார்கள். அதன் பிறகு புகாரைக் கொடுத்தவரும் வாங்கியவர்களுமே மறந்து போவார்கள். எப்போதாவது பொதுமக்களே ஆடு திருடர்களைப் பிடித்துக் கொடுத்தால் சிறைக்கு அனுப்புவார்கள். ஏற்கனவே புகார் கொடுத்தவர்கள் வந்து கேட்டுப் பார்த்து வழக்கமான ஏமாற்றத்துடனேயே வீடு திரும்புவார்கள்.
இப்படித் திருடு போன பல ஆடுகள் தான் அந்தந்த பல நூறு குடும்பங்களின் வாழ்வாதாரம் என்பது மறந்து போகிறது. இந்த சூழ்நிலையில்தான் கடந்த வாரம் திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் ஆடு திருடர்களை விரட்டி வந்து புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல் சரகத்தில் வைத்துப் பிடித்த போது, தஞ்சை மாவட்டம் தோகூர் கிராமத்தைச் சேர்ந்த ஆடு திருடன் மணிகண்டன் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அவனது உறவுக்கார சிறுவர்கள் இருவர் என மூவராலும் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கல்லால் தாக்கி தடுமாற வைத்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்படுகிறார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
அதன் பிறகு தான் காவல் உயர் அதிகாரிகள் ஆடு திருடர்களைப் பிடிப்போம் என்று உறுதியாகக் கூறியதோடு ஆடு திருடர்களை பிடிக்கத் தனிப்படை அமைத்தனர். அந்த தனிப்படைகள் தான் தற்போது உள்ளூர் காவல் நிலையங்களால் புறக்கணிக்கப்பட்ட ஆடு திருடர்களைத் தூக்கும் பணியைச் செய்யத் தொடங்கியுள்ளனர்.
திருமயம் காவல் எல்லையில் 9 ஆடுகளைத் திருடிய கந்தர்வகோட்டை வேளாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் சூரிய மூர்த்தியைக் கைது செய்து அவனிடம் இருந்த 9 ஆடுகளையும் பறிமுதல் செய்தனர்.
அதே போல கறம்பக்குடி பகுதியில் வைத்து வேளாங்கண்ணி பகுதியைச் சேர்ந்த ராசு மகன் சதீஷ் (31) என்பவனைப் பிடித்து விசாரிக்க.. நாங்க பல டீம் இருக்கோம். நாங்க பைக்ல ஆடு திருட கிளம்பிட்டு கந்தர்வகோட்டை நெப்புகை அழகப்பன் அண்ணனுக்கு தகவல் சொல்லிட்டா கரெக்டா கார் எடுத்துக்கிட்டு வந்துடுவார். நாங்க பைக்ல தூக்கிட்டு வரும் குட்டியை கார்ல தூக்கி போட்டுக்கும் ஸ்பாட்லயே பணம் கொடுப்பார். அண்ணன்கிட்ட மட்டும் சுத்தமான கறி கிலோ ரூ.600 க்கு கிடைக்கும். சனி ஞாயிறுல 10 ஆடுகளை கறியாக்கி வித்துடுவார். இப்ப கூட அவர் தோட்டத்துல நிறைய ஆடுகள் நிற்குது என்று சொல்ல, தனிப்படை போலீசார் 52 வயது அழகப்பனையும் தூக்கிக் கொண்டு அவனது தோட்டத்தில் நின்ற 32 ஆடுகளையும் கைப்பற்றினர். இன்னும் மாவட்டம் முழுவதும் ஆடு திருடர்களைத் தூக்கிடுவோம் என்கின்றனர் தனிப்படை போலீசார்.
இப்படி ஒவ்வொரு புகாருக்கும் உடனே நடவடிக்கை எடுத்திருந்தால் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் உயிர் போய் இருக்காது.