Skip to main content

ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்தது ஏன்? - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்!

Published on 17/05/2021 | Edited on 17/05/2021

 

tamilnadu schools education minister pressmeet at trichy

 

புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று (17/05/2021) காலை காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தமிழக அரசு பங்கேற்கவில்லை.

 

இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "புதிய கல்விக்கொள்கை மூலம் குலக்கல்வித் திட்டத்தைத் திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. ஐந்து வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள்தான் பள்ளியில் சேர முடியும் என்பது பொது விதி. தமிழகத்தில் இருமொழிக் கொள்கைக்கு வேட்டு வைக்க மும்மொழிக் கொள்கையைக் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். மூன்றாவது மொழியைத் திணிக்கும் மறைமுக முயற்சி இருப்பதாகக் கருதுகிறோம். 3,5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குழந்தைகளுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும். கல்வி அமைச்சரிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை. கோரிக்கை ஏற்கப்படாததால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கல்வி அமைச்சரை ஆலோசனைக்கு அழைக்காமல் துறை அதிகாரியை அழைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. புதிய கல்விக்கொள்கை விவகாரத்தில் முதலமைச்சரின் உத்தரவுப்படி செயல்படுவோம். 

 

நாங்கள் அரசியலாகப் பார்க்கவில்லை; மாணவர் நலனே முக்கியம். மோதல் போக்குடன் இல்லாமல் இணக்கமாக செயல்படவே விரும்புகிறோம். நாங்கள் சொல்லும் திருத்தங்களை ஏற்றால் புதிய கல்விக்கொள்கையை ஏற்போம். பிளஸ் 2 பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும்; மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்." இவ்வாறு அமைச்சர் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்