தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்குப் பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இதுவரை தேர்தல் பறக்கும் படையினரால் ரூபாய் 412 கோடிக்கு பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். இதில் ராணிப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் ரூபாய் 91.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 28 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் ரூபாய் 1.3 கோடியும், பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் ரூபாய் 12.17 லட்சமும், விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் ரூபாய் 65 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி நேர பணப்பட்டுவாடாவைத் தடுக்கக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையோடு தேர்தலை நடத்த ஆணையம் விரும்புகிறது. பணம் மற்றும் நகை பறிமுதல் செய்யப்பட்டது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கையை தலைமை தேர்தல் ஆணையம் எடுக்கும். தமிழகத்தில் மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகள் 551 உள்ளன. பதற்றமான வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 10,727 ஆக உள்ளது. வாக்குச் சாவடிக்குள் பொதுமக்கள் செல்போன்கள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.