சென்னையில் நேற்று காலை தொடங்கிய மத்திய அமலாக்கத்துறை சோதனை புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் ராமச்சந்திரன் அலுவலகம், முத்துப்பட்டனம் வீடு, அவரது நண்பர்கள் மணிவண்ணன் வீடு, உறவினர்கள் வீரப்பன் வீடு என 7 இடங்களில் சோதனைகள் தொடர்ந்து நடந்தது. இரவு ஆடிட்டர் முருகேசன் வீடு சோதனை தொடங்கிய நிலையில் ராமச்சந்திரன் வீட்டிற்கு கூடுதல் வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அலுவலர்கள் விடிய விடிய சோதனை செய்துள்ளனர்.
இந்த நிலையில் அமலாக்கத்துறையின் சோதனை இன்றும் 2 வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. மணல் ராமச்சந்திரன் அலுவலகம், வீடு, ஆடிட்டர் முருகேசன், மணிவண்ணன் வீடு என 4 இடங்களிலும் அமைச்சர் துரைமுருகனுடன் நெருக்கமாக உள்ள கரிகாலனின் குளந்திரான்பட்டு வீட்டிலும் சோதனைகள் தொடர்ந்துள்ளது. மேலும் சில இடங்களில் சோதனைக்கும் தயாராகி உள்ளனர்.
சோதனையின் போது வங்கி பணப்பரிவர்த்தனைகள் குறித்து விவரமறிய வங்கி அதிகாரிகளையும், நகைகள் மதிப்பிட நகை மதிப்பீட்டாளர்களையும், சொத்து மதிப்பீடு காண பத்திரப்பதிவு அலுவலர்களையும் அழைத்து வந்து மதிப்பீடு செய்ய உள்ளனர். மேலும் நில உச்சவரம்பு சட்டத்தை மீறி சொத்துகள் வாங்கி குவித்துள்ள பட்டியலையும் தயாராக வைத்துள்ளனர். இதில் சரியான ஆவணங்கள் இல்லாமல் அறந்தாங்கி அழியாநிலை பஞ்சு மில் நிலம் கிராமச் சொத்து எப்படி ராமச்சந்திரன் மகன் பெயருக்கு போனது. கிராம சொத்தை யார் பட்டா மாற்றி கொடுத்தது? என்பது பற்றியும் கிராம சொத்தை பிளாட் போட்டு விற்க அனுமதி அளித்த அதிகாரிகளையும் அழைத்து வந்து விசாரிக்க உள்ளதாகவும் புலிவலத்தில் நில உச்சவரம்பு சட்டத்தால் பறிமுதல் செய்யப்பட்டு பட்டியலினத்தவர்களுக்கு கொடுத்த சொத்தை எப்படி ஒரே நபரிடம் இருந்து 40 ஏக்கர் வாங்கினார்கள் என்பது குறித்த ஆவணங்களும் பெறப்பட்டு விசாரணைக்கு மணல் ராமச்சந்திரனை எதிர்பார்த்து உள்ளனர்.
கடைசியில் அமைச்சர் துரைமுருகன் குடும்பத்தினருடன் உள்ள உறவு என்ன என்பதை அவர்கள் மூலமே அறிந்து துரைமுருகன் வீட்டிற்கு செல்லவும் அமலாக்கத்துறை தயாராகி வருவதாக கூறப்படுகிறது. மேலும் ராமச்சந்திரனின் சம்பந்தியான தஞ்சை எம்.பி. பழனிமாணிக்கம் குடும்பத்தினரிடமும் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.