இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ''அடுத்த ஆண்டிலிருந்து எல்லா பல்கலைக்கழகங்களிலும் குறிப்பாகப் பாடத்திட்டங்களில் நிச்சயம் மிகப்பெரிய மாற்றம் இருக்கும். அதுவும் குறிப்பாக பி.காம் படிப்பில் ஒரு ஆண்டு மட்டும் தமிழ் என்றும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதல் ஆண்டில் மட்டும்தான் தமிழ் இருந்தது. அதை எல்லாம் மாற்றி இன்று எல்லா பல்கலைக்கழகங்களிலும் தமிழ் பாடம், ஆங்கில பாடம் இந்த இரண்டும் கண்டிப்பாக கற்றுத் தர வேண்டும். அதில் முதல் செமஸ்டர், இரண்டாம் செமஸ்டர், மூன்றாம் செமஸ்டர், நான்காவது செமஸ்டர் என நான்கு செமஸ்டர்களிலும் இந்த மொழிப்பாடம் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் அறிவுறுத்தி இருக்கிறோம்.
யூனிபார்மாக சிலபஸ் இருக்க வேண்டும் என எல்லா பல்கலைக்கழகங்களிலும் அறிவுறுத்தியிருக்கிறோம். அவர்களும் இதற்கான கருத்துக்களை எல்லாம் தெரிவித்து இருக்கிறார்கள். 'நான் முதல்வன்' திட்டத்தில் முதல்வர் அறிவித்த திட்டத்தின் கீழ் படிக்கிற மாணவர்களுக்கு வேலை பயிற்சி கொடுக்க வேண்டும். அவர்களுக்குத் திறனாய்வு பாடத்திட்டம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் பாடத்திட்டங்களை இணைப்பதற்கு முயற்சிகள் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம்'' என்றார்.