தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "9, 10, 11, 12- ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மற்றும் பள்ளி விடுதிகள் 16/11/2020 முதல் திறக்க அனுமதிக்கப்பட்ட உத்தரவு, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை ரத்து செய்யப்படுகிறது. பள்ளிகள் திறப்பு தேதி சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும். சில பெற்றோர் பள்ளிகளை திறக்கலாம் என்றும், சிலர் பள்ளிகளை திறக்க வேண்டாம் எனவும் கூறினர். இருவேறு கருத்துக்களை ஆராய்ந்து பள்ளி, விடுதிகள் திறப்பு பற்றிய அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
05/11/2020 அன்று வெளியிடப்பட்டுள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலின் படியும், அனைத்து ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு மட்டும் கல்லூரி/ பல்கலைக்கழகங்களை 02/12/2020 முதல் திறக்க உத்தரவிடப்படுகிறது. மேலும், இதர வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும். 02/12/2020 அன்று திறக்கப்படும் கல்லூரிகளில் மட்டும் மாணவர்களுக்கான விடுதிகள் திறக்கப்படும். கல்லூரிகள் மற்றும் விடுதிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும். பிற மாணவர்களுக்கு ஏற்கனவே நடைபெற்று வரும் இணையவழி கல்வி முறை தொடர்ந்து நடைபெறும்.
சமுதாய, அரசியல், மத, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வு, கல்வி கூட்டங்களுக்கு கட்டுப்பாடு தொடரும். நவம்பர் 16- ஆம் தேதி முதல் 100 பேருக்கு மேல் பங்கேற்கலாம் என்ற உத்தரவு மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.