தமிழ்நாடு பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. சங்க மாநிலத் தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் துரைராஜ் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு விரைந்து ஆவண செய்ய வேண்டும், அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவிக்கும் அதே நாள் முதல் தமிழக அரசும் அறிவித்து சிறிதும் குறைக்காமல் வழங்க வேண்டும்; காலவரையறையின்றி முடக்கப்பட்டுள்ள சரண் விடுப்பை உடனடியாக விடுவித்து ஒப்படைப்பு செய்து பணமாக்கிக் கொள்ள உத்தரவிட வேண்டும்; 6 முதல் 10ம் வகுப்பு வரை குறைந்தது 8 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்; பட்டதாரி ஆசிரியர் பணியிட நிர்ணயத்தில் உயர்நிலைப் பள்ளிகளில் உள்ளபடியே மேல்நிலைப் பள்ளிகளிலும் நிர்ணயம் செய்ய வேண்டும்; இல்லாவிட்டால், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பணியிட நிர்ணய முறையை தடுக்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது; துறை அனுமதி பெறாமல் உயர்கல்வி முடித்த ஆசிரியர்களுக்கு சிறப்பு நிகழ்வாக கருதி பின்னேற்பு வழங்க வேண்டும்; உயர், மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் உருவாக்க வேண்டும்.
எமிஸ் மற்றும் இணையவழி பணிகளை செய்யும் வகையில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் அரசின் அனைத்து செயலிகளையும் கொண்ட ஸ்மார்ட்போனை அரசே வழங்க வேண்டும்; பொது மாறுதல் கலந்தாய்வை ஆண்டுதோறும் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடத்த வேண்டும்; அரசின் அனைத்து பொதுத்தேர்வு மற்றும் திறனறி தேர்வு பணிகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான உழைப்பூதியம் மற்றும் மதிப்பூதியங்களை தற்போதைய சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும்; வளரும் தொழில்நுட்ப உலகிற்கேற்ப மாணவர்களுக்கான தேர்வு முறைகளில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்; ஆசிரியர் தகுதித்தேர்வை அடிப்படையாகக் கொண்டு மட்டும் பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் மேற்கொள்ள வேண்டும்; தனித்தேர்வு நடத்தக்கூடாது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.