டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 முறைகேட்டில் கைதான புரோக்கர் ஜெயக்குமாருக்கு ஸ்பெஷல் ரூம், நாட்டுக்கோழி குழம்பு, மட்டன், வெஸ்டர்ன் டாய்லெட் என சிறையில் சொகுசு சலுகைகள் அளிக்கப்பட்டு வருவதை எக்ஸ்க்ளூஸிவாக அம்பலப்படுத்தினோம். இதனைத் தொடர்ந்து இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் சிறைத்துறை டி.ஜி.பி. சுனில்குமார் ஐ.பி.எஸ்.
ஜெயக்குமாருக்கு சொகுசு சலுகைகள் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே ஹை செக்யூரிட்டி- 2 வில் 54 வது அறையில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார். மேலும், சி.பி.சி.ஐ.டி. விசாரணையிலிருந்து தப்பிக்க வைக்க ஜெயக்குமாரை ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும் முயற்சி எடுத்தார்கள் சிறை அதிகாரிகள். நக்கீரனில் அம்பலப்படுத்தியதால் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு ஆஜராகி வருகிறார் ஜெயக்குமார்.
அதாவது, 2020 பிப்ரவரி 7 ந்தேதிலிருந்து 14 ந்தேதிவரை புரோக்கர் ஜெயக்குமார் சி.பி.சி.ஐ.டி. கஸ்டடி விசாரணையில் இருந்ததால் பிப்ரவரி 15,16,17,18 தேதிகளில் சிறையில் இருந்துள்ளார். பிப்ரவரி 19 ந்தேதியிலிருந்து 24 ந்தேதிவரை சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் இருந்ததால் பிப்ரவரி 25, 26,27,28,29, மார்ச்-1 தேதிகளில் சிறையில் இருந்துள்ளார்.
மார்ச் 2 ந்தேதியிலிருந்து 5 ந்தேதிவரை சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் இருந்ததால் மார்ச் 6, 7, 8, 9, 10, 11, 12 தேதிகளிலிருந்து தற்போது வரை புழல் மத்தியச் சிறையில் தொடர்கிறார் டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் கைதான ஜெயக்குமார்.
புழல் சிறை வளாகத்திற்குள் இரண்டு விதமான சிறைகள் உள்ளன. பிரிசன்-1 என்பது நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட தண்டனைக் கைதிகளை அடைத்து வைத்திருக்கும் சிறை.
பிரிசன் -2 என்பது காவல்துறையால் குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் சிறை.
விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் பிரிசன் -2 வில் ஐந்துவிதமான ப்ளாக்குகள் உள்ளன.
1) குவாரண்டின் ப்ளாக்
2) 1,2,3, 4, 5 ப்ளாக்குகள்
3) ஹெச்.எஸ் எனப்படும் ஹைசெக்யூரிட்டி-1
4) ஹெச்.எஸ். எனப்படும் ஹைசெக்யூரிட்டி-2
5) பிரிசன் டிஸ்பெஞ்சரி
இதில், குவாரண்டின் ப்ளாக்கில் சிறியது, பெரியது, தனிநபர் என 25 செல்கள் அதாவது அறைகள் உள்ளன. சிறிய அறைகளில் சுமார் 20 கைதிகள், பெரிய அறைகளில் சுமார் 50 கைதிகள், தனிநபர் அறையில் 1 அல்லது 2 கைதிகள் தங்கவைக்கப்படுவார்கள். டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் கைதான 50 க்குமேற்பட்டவர்கள் இந்த ப்ளாக்கில்தான் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இங்குதான், ஜெயக்குமாரும் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சொகுசாக தங்க வைக்க வேண்டும் என்பதற்காக ஹை செக்யூரிட்டி-2 ப்ளாக்கில் 54 வது அறையில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார். ஒருவேளை சககைதிகளால் ஆபத்து என்றால் 1,2,3,4,5 ப்ளாக்குகளில் தங்க வைத்திருக்கலாம்.
1,2,3,4,5 ப்ளாக்குகளில் 1 வது ப்ளாக்கில் 25 அறைகள், 2,3,4 ஆகிய ப்ளாக்குகளில் 20 அறைகள், 5 வது ப்ளாக்கில் 15 பெரிய அறைகள் உள்ளன. இந்த, ஐந்தாவது ப்ளாக்கில் 9,10 வது அறைகளில் வெஸ்டர்ன் டாய்லெட் வசதிகள் உள்ளன. கை கால் முறிந்து வருகிற கைதிகளுக்கு 9 வது அறையிலும் 60 வயதுக்கு மேற்பட்ட முதிய கைதிகளுக்கு 10 வது அறையிலும் பயன்படுத்திக் கொள்ளவே இந்த வசதிகள்.
ஹை செக்யூரிட்டி-1 மற்றும் 2 வில் தலா ஐந்து சப்-செல்கள் உள்ளன. ஹை செக்யூரிட்டி-1 ல் 58 கைதிகள், ஹைசெக்யூரிட்டி 2 வில் 58 கைதிகள் தனித் தனியாக அடைக்கப்பட்டிருப்பார்கள். இதில், ஹை செக்யூரிட்டி -2 வில் 54 வது அறையில்தான் ஜெயக்குமார் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்.
பிரிசன் டிஸ்பெஞ்சரியில் 5 அறைகள் உள்ளன. இதில்தான்,ஸ்வாதி கொலையில் கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதி ராம்குமார் மர்ம மரணம் அடைந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ப்ளாக்கில்தான் போலீஸ் பக்ரூதின் அடைக்கப்பட்டிருக்கிறார்.
சிறைதண்டனக்கூட கொடுக்கவில்லை என்றால் டி.என்.பி.எஸ்.சி. முறைகேடுகள் தடுக்கப்படும் என்று அதிமுக அரசு சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?