கிருஷ்ணகிரியில் கஞ்சா போதையில் ரிலீஸ் வீடியோக்கள் வெளியிட்டு வந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்த நிலையில் அந்த இளைஞரை கையெடுத்து கும்பிட வைத்து மன்னிப்பு கேட்க வைக்கும் வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பழையபேட்டை பகுதியில் அதிகளவில் கஞ்சா விற்பனையாவதாகக் கிடைத்த ரகசிய தகவலை அடுத்து உதவி காவல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது பழையபேட்டை பேருந்து நிலையம் அருகே கஞ்சா புகைத்தபடி இளைஞர் ஒருவர் ரீல்ஸ் வீடியோ செய்து கொண்டிருந்தார். அவரைப் பிடித்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது இளைஞரின் செல்போனை வாங்கி பார்த்ததில் அவரது செல்போனில் கஞ்சா செடியுடன் ரீல்ஸ், கஞ்சா புதைப்பது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் இருந்துள்ளது. மேலும் தன்னை ஒரு கேங்ஸ்டர் போல காட்டிக் கொண்டு இளைஞர்களை மிரட்டுவது, மிரட்டல் பார்வையுடன் நடப்பது எனப் பல்வேறு ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து வெளியிட்டது தெரிய வந்தது. உடனடியாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் அந்த இளைஞர் கிருஷ்ணகிரி மாவட்டம் பழையபேட்டையைச் சேர்ந்த அசோக் என்பது தெரிய வந்தது. ஏற்கனவே அந்த இளைஞர் மீது மூன்று அடிதடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.
அந்த இளைஞரின் செல்போனில் காவலர்களை மிரட்டுவது போன்ற ரீல்ஸ் வீடியோக்களும் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக காவல்துறையினர் அவர்கள் வழியில் நடத்திய அட்வைஸ்க்கு பிறகு அந்த இளைஞர், “இனிமேல் கத்தி, கஞ்சாவுடன் வீடியோ பண்ணமாட்டேன் சார்; அடிதடிக்கு போகமாட்டேன் சார்; ரவுடிசம் பண்ணமாட்டேன் சார்; ரவுடிசம் பண்ற மாதிரி வீடியோ பண்ணமாட்டேன் சார்; போலீசை எதிர்க்கிற மாதிரி வீடியோ பண்ணமாட்டேன் சார்; எதுவும் பண்ணமாட்டேன் சார்; இந்த ஒரு தடவை என்னை மன்னித்து விடுங்கள் சார்; திருந்திடுவேன் சார் கண்டிப்பா” என மன்னிப்பு கேட்கும் வீடியோ காட்சியை போலீசார் வெளியிட்டுள்ளனர்.