தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஷிவ்தாஸ் மீனா மற்றும் டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொள்கின்றனர்.
தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இறையன்பு செயல்பட்டு வருகிறார். இன்றுடன் அவர் ஓய்வு பெற உள்ள நிலையில் தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனாவை நியமித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இந்நிலையில் தற்போது ஷிவ்தாஸ் மீனா கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைக் கவனித்து வருகிறார். இதையடுத்து தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா தலைமைச் செயலகத்தில் இன்று பதவியேற்றுக் கொள்கிறார். 1989 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான இவர் முதன் முதலில் காஞ்சிபுரம் உதவி ஆட்சியராகப் பணியைத் தொடங்கியவர். இவர் தமிழகத்தின் 49வது தலைமைச் செயலாளர் ஆவர். ஷிவ்தாஸ் மீனாவிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அதேபோன்று தமிழக டிஜிபியாக பொறுப்பு வகிக்கும் சைலேந்திரபாபு இன்றுடன் பணி ஓய்வு பெற இருக்கும் நிலையில் தற்பொழுது சென்னை காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தமிழக டிஜிபியாக நியமிக்கப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளியானது. இதையடுத்து இன்று காவல்துறை தலைமையகத்தில் தமிழக டிஜிபியாக சங்கர் ஜிவால் இன்று பதவியேற்றுக் கொள்கிறார்.
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவை பூர்வீகமாகக் கொண்ட சங்கர் ஜிவால், 1990 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். சேலம், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், திருச்சி மாநகர காவல் ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். அதேபோல் மத்திய அரசின் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் மண்டல தலைவராகவும் இருந்துள்ளார். உளவுத்துறை ஐஜியாகவும் பணியாற்றியுள்ளார். ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப் படையின் தலைவராகவும் இருந்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டு 3 ஆண்டுக் காலமாகப் பணியாற்றி வந்தார். சிறந்த காவல் சேவைக்கான காவலர் பதக்கத்தை 2007 ஆம் ஆண்டும், குடியரசுத் தலைவர் காவலர் பதக்கத்தை 2019 ஆம் ஆண்டும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.