கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் கடந்த மார்ச் 25- ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருகிறது. இதனால் வேலை வாய்ப்பைத் தேடி தமிழகத்திற்கு வந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் வாழ வழியின்றி திண்டாடி வந்து கொண்டிருந்தனர். இதனால் அவர்களைச் சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது.
தமிழகத்தில் உத்திரபிரதேசம், பீகார், உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளாகள் வேலை செய்து வந்தனர். இவர்களில் திருச்சி மாவட்டத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களில் 984 பேர், பெரம்பலூர் 120 பேர், கரூரில் 254 பேர், என நான்கு மாவட்டத்தைச் சேர்ந்த 1425 பேர் திருச்சி ரயில்வே ஜங்ஷனில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் எம்.ஆர்.எப். டயர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தவர்கள் வேலையில்லாமல் பெரம்பலூர் பகுதியில் டைல்ஸ் ஒட்டுவது, மார்பிள் போடுவது என சின்னச் சின்ன வேலைகள் செய்தாலும் இதை வைத்து பிழைக்க முடியாது, எங்களைச் சொந்தவூரான உத்தரப் பிரதேசத்திற்கு அனுப்பி விடுங்கள் என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை வைத்தனர். அவர்களில் 120 பேர் தமிழக அரசின் அனுமதி பெற்று திருச்சியிலிருந்து ரயிலில் புறப்பட்டனர். இதே போல் விழுப்புரத்தில் 247 பேர், கள்ளக்குறிச்சியில் 197 பேர், கடலூரில் 600 பேர், அரியலூரிலிருந்து 330 பேர் என மொத்தம் 1,374 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழகத்தில் இருந்து நேற்று (17/05/2020) மட்டும் திருச்சியில் 1,425 விழுப்புரத்தில் 1,324 ஆக மொத்தம் 2,749 வெளிமாநிலத் தொழிலாளர்கள் ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.