தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு பணிகள், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. அந்த வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தகுதி வாய்ந்தவர்கள் தாமாக முன்வந்து கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுமக்களை அறிவுறுத்தி வருகின்றன. அதேபோல், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்; கைகளை அடிக்கடி சோப்பு (அல்லது) கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை பொதுமக்களுக்கு அரசு அவ்வப்போது வழங்கி வருகிறது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கரோனா தடுப்பூசி மீதான பொது மக்களின் அச்சம் தீர வேண்டும் என்பதற்காகவே அரசு மருத்துவமனையில் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டவர் நண்பர் விவேக். அவர் விரைவில் நலம் பெற வேண்டுமென விரும்புகிறேன். அவரது உடல் நலக் குறைவுக்கு கரோனா தடுப்பூசி காரணம் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்தப் பெருந்தொற்று காலத்தில் நாம் தேவையற்ற அச்சம் கொள்வதை, வதந்திகளைப் பரப்புவதை நிறுத்தி விட்டு அரசுடன் ஒத்துழைப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.