சென்னையில் நடமாடும் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று மளிகைப் பொருட்களை விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
நடமாடும் வாகனங்கள் மூலம் வீதி வீதியாகச் சென்று விற்பனைச் செய்ய 2,197 கடைக்காரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விற்பனையாளர்கள் குறித்த தகவல்கள் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், விற்பனையாளர்கள் குறித்த தகவல்கள் மாநகராட்சியின் 'நம்ம சென்னை' என்ற செயலியிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 11 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரூபாய் 300க்கும், 20 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரூபாய் 400க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. நடமாடும் வாகனங்களில் தனித்தனியாகவும் மளிகைப் பொருட்களைப் பொதுமக்கள் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பி.கே. சேகர்பாபு, "7,500 நடமாடும் கடைகள் மூலம் மளிகைப் பொருட்களை விற்பனை செய்யத் திட்டமிட்டப்பட்டுள்ளது. தற்போது வரை 2,192 விற்பனை வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் சென்னை மாநகராட்சியைத் தொடர்புகொண்டு விற்பனையைத் தொடங்கலாம்" என்றார்.
அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், "இதுவரை 83 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே மத்திய அரசிடமிருந்து வந்துள்ளன. அரசின் மீது குற்றச்சாட்டு வைப்பதைவிட நடப்பதை தெரிந்துகொள்ளுங்கள். 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 12 லட்சம் தடுப்பூசிகள் வர வேண்டியுள்ளன. பாஜக தலைவர் எல். முருகன் மத்திய அரசிடமிருந்து தடுப்பூசிகள் பெற்றுத்தர முயற்சிக்க வேண்டும். கூடுதல் தடுப்பூசிகளைப் பெற்றுத் தருவது தமிழக பாஜகவின் கடமை; அதை எல். முருகன் செய்ய வேண்டும். தமிழகத்துக்குத் தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசுதான் பாரபட்சம் காட்டுகிறது. கோவை மாவட்டத்தில்தான் கரோனா தடுப்பூசி அதிகம் பெறப்பட்டுள்ளது. தடுப்பூசி முகாம்களில் திமுகவினர் தலையீடு இல்லை" எனத் தெரிவித்தார்.