தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஸ்ரீசைலம் அணையில் இருந்து, ஆந்திர மாநில அரசு தமிழகத்துக்கு நீர் திறந்துள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து பேசினர். அப்போது தமிழகத்திற்கு ஆந்திராவில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் இதற்காக தமிழக முதல்வர் அளித்த கடிதத்தை ஆந்திர மாநில முதல்வர் ஜெகனிடம் கொடுத்தனர்.
இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் இருந்து நீர் திறக்க, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகத்திற்கு ஸ்ரீசைலம் அணையில் இருந்து வினாடிக்கு 7000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஸ்ரீசைலம் அணையின் மொத்த கொள்ளளவு 215 டிஎம்சி ஆகும். தற்போது இந்த அணையின் நீர் இருப்பு 206 டிஎம்சியாக உள்ளது. இதன் மூலம் சென்னை மக்களின் குடிநீர் பற்றாக்குறை தீரும் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீசைலம் அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் 20 நாட்களுக்குள் கண்டலேறு அணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சென்னைக்கு ஆந்திர மாநில அரசு கிருஷ்ணா நதி நீர் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு கோரிக்கை விடுத்த இரண்டு நாட்களில், ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் நீர் திறக்க உத்தரவிட்டுள்ளது என்பது தமிழக மக்களை வியப்படைய செய்துள்ளது.