Skip to main content

உள்ளாட்சி ஊழல் புகார்களை விசாரிக்க நடுவரை நியமிக்கக் கோரிய மனு!- தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/06/2020 | Edited on 25/06/2020

 

tamilnadu government chennai high court

 

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புக்களில் நடக்கும் முறைகேடுகள், ஊழல் புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்திற்கு, நடுவரை நியமிக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

மத்திய அரசு, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள், மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்க, லோக்பால் சட்டம் நிறைவேற்றியது. அதேபோல, அந்தந்த மாநிலங்களில், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்க, லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வரிசையில், உள்ளாட்சி அமைப்புக்களில் மேயர், துணைமேயர் முதல் பஞ்சாயத்துத் தலைவர், உறுப்பினர்கள் வரையிலான நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் மீதான ஊழல் புகார்கள், முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க 2014- ஆம் ஆண்டு, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புக்கள் முறைமன்ற நடுவம் அமைக்கப்பட்டது.

 

இந்த நடுவத்தின் நடுவராக, முதலில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சோ.அய்யர், கடந்த மார்ச் வரை இப்பதவியில் நீடித்தார். தற்போது, இப்பதவி காலியாக உள்ளது. இப்பதவிக்குத் தகுதியானவர்களை முதல்வர் பரிந்துரைக்க, ஆளுநர் நியமனம் செய்ய வேண்டும். தற்போது பதவி காலியாக உள்ளதாலும், ஏராளமான முறைகேடு புகார்கள் நிலுவையில் உள்ளதாலும், நடுவரை நியமிக்கும்படி, ஆளுநரின் செயலருக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

 

அந்த மனுவில், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட புகார்கள் ஏராளமான அளவில் நிலுவையில் உள்ளது. இதுவரை எந்த அதிகாரியின் பெயரும் பரிந்துரைக்கப்படவில்லை. கரோனா பரவல் அதிகம் உள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும், அதிகாரிகளும் முறைகேடுகளில் ஈடுபடுவதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்