பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, எழுத்துப் பிழையாக 'போதுத்தேர்வு' என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பிழைபட எழுதியதால் ட்விட்டரில் இணையவாசிகள் அவரை கிண்டல் செய்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
கரோனா தொற்று அபாயம் காரணமாக, தமிழகத்தில் மார்ச் 24- ஆம் தேதி மாலை முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அப்போது நடத்தி முடித்திருக்க வேண்டிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், பள்ளிகள் திறந்த உடனே, ஜூன் 1- ஆம் தேதி முதல் 12- ஆம் தேதிக்குள் பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கடந்த சில நாள்களுக்கு முன்பு திடீரென்று அறிவித்தார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பு ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்களிடைய பெரும் அதிருப்தியை ஏற்டுத்தியது. பள்ளிகள் திறக்கப்பட்ட அன்றே பொதுத்தேர்வைத் தொடங்குவதால் மாணவர்களைக் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் என்றும், அவர்களைத் தேர்வுக்குத் தயார்படுத்த பதினைந்து நாள்கள் வரை அவகாசம் வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர். தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இதே கருத்தை வலியுறுத்தியதோடு, பொதுத்தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தின. ஆனாலும் திட்டமிட்டபடி ஜூன் 1- ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கப்படும் என்று, இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் திட்டவட்டமாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.
இந்நிலையில், திடீரென்று செவ்வாய்க்கிழமையன்று (மே 19) பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகளை ஜூன் 1 ஆம் தேதிக்குப் பதிலாக ஜூன் 15- ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவித்தார். புதிய கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. இப்படி அடிக்கடி கால அட்டவணையை மாற்றி மாற்றி அறிவிப்பதால் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று மீண்டும் அதிருப்தி கிளம்பின.
இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''10- ஆம் வகுப்பு போதுத்தேர்வைப் பொறுத்தவரை, இன்று மாண்புமிகு முதல்வர் அவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு தேர்வு தேதிகள் மாற்றப்பட்டிருக்கின்றது. ஜூன் 15- ஆம் தேதியில் இருந்து ஜூன் 25- ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளைப் பரிசீலித்த பின் தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது,'' என்று பதிவிட்டிருந்தார்.
அவர் தனது பதிவில், பொதுத்தேர்வு என்பதை, 'போதுத்தேர்வு' என்று எழுத்துப்பிழையுடன் பதிவு செய்திருந்தார். பள்ளிக்கல்விக்கு அமைச்சராக இருந்துகொண்டு மிக எளிமையான சொல்லையே பிழையாக எழுதலாமா? எனக்கேட்டு இணையவாசிகள் பலரும் அவரை ட்விட்டர் பக்கத்தில் கேலி, கிண்டல் செய்து கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.
ஒரு பதிவர், ''என்ன சார் கல்வித்துறை அமைச்சராக இருக்கீங்க. இப்படி நீங்களே பொதுத்தேர்வைத் தப்பா பண்ணுனா எப்படி சார்?,'' என்றும், மற்றொரு பதிவர், ''பொதுத்தேர்வு - ஸ்பெல்லிங் விஷயத்தில் மட்டுமல்ல. தேர்வு விசயத்திலும் மொத்தக்குழப்பமே,'' என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
இன்னொரு பதிவர், ''இது என்ன புதுசா போதுத்தேர்வை! கல்வித்துறை அமைச்சரின் தமிழ், தமிழகத்தில் தமிழை நல்லா வளர்க்கிறது. தமிழும், தமிழகமும் விளங்கிடும்டா சாமி,'' என்று பதிவிட்டுள்ளார். சில பதிவர்கள், ''நன்றி அய்யா. தொடக்கமே சொற்பிழையில் உள்ளது,'' என்றும், ''அப்படி தப்பு தப்பா எழுதினாதாங்க கல்வி அமைச்சர்,'' என்றும் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இன்னொரு பதிவர், அமைச்சரிடம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். அவர், ''ஊரடங்கே முடியல. கரோனா பரவல் இன்னும் கண்ட்ரோலுக்கு வரல. வீட்டைவிட்டு பக்கத்து கடைத்தெருவுக்குப் பிள்ளைகளை அனுப்பவே பயப்படும் சூழ்நிலை இருக்கும்போது தேர்வுக்கு என்ன அவசரம்? உங்களிடம் திறமையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருந்தும் இப்படி முடிவெடுக்கவும் மாத்தி மாத்தி பேசவும் காரணம் என்ன சார்?,'' என்று ஆதங்கத்துடன் கேட்டுள்ளார். மற்றொரு பதிவரும் இதே தொனியில், ''ஏன் இவ்வளவு குளறுபடிகள்? ஒரு தெளிவான முடிவை எடுக்காமல் மாணவர்களை ஏன் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறீர்கள்?,'' என்று கேள்வி எழுப்பியுள்ளார். ''இதைத்தான் தளபதி மு.க.ஸ்டாலின் சொன்னார். எல்லாத்தையும் அவர் சொல்லி செய்வதற்கு ஆட்சியை அவரிடமே கொடுத்திடுங்க சார்,'' என்றும் ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றபோது, பள்ளிக்கல்வித்துறைக்கு செங்கோட்டையன் அமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போதுமுதல் பள்ளிக்கல்வித்துறையில் நிறைய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.
பிளஸ்1 வகுப்புக்கு பொதுத்தேர்வு, பிளஸ்2 பொதுத்தேர்வு மதிப்பெண்களை 600 ஆக குறைத்தது, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மொழிப்பாடங்களுக்கு ஒரே தேர்வு, அரசுப்பள்ளிகளில் நீட் தேர்வுக்கு பயிற்சி, தணிக்கை பயிற்சி, பாடத்திட்டம் மாற்றம் என பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவற்றின் மூலம் எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவையில் செங்கோட்டையன் மட்டுமே எப்போதும் துடிப்பான அமைச்சர் போல பவனி வந்தார். சீர்திருத்தம் ஒருபுறம் இருந்தாலும், தேர்வுகால அட்டவணை வெளியிடுவது முதல் நீட் தேர்வுக்குப் பயிற்சி அளிப்பது வரை எல்லாவற்றிலும் ஏகத்துக்கும் சொதப்பல்களும் இருந்தன.
இந்நிலையில்தான் அமைச்சர் செங்கோட்டையன், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பிலும் சொதப்ப, அரசியல் கட்சியியனர் முதல் இணையவாசிகள் வரை அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.