சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (28/09/2020) காலை செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் குறித்து வரும் அக்டோபர் 7- ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நிர்வாகிகள் கூறினர்.
இந்த நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது வீட்டில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி. எம்.பி., முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்கு பிறகு வெளியே வந்த வைத்தியலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; "கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை; அ.தி.மு.க. தான் மீண்டும் ஆட்சியமைக்கும். ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் இருவருக்கும் எனது ஆதரவு உண்டு" என்றார்.
மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வரும் நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.