கிருஷ்ணகிரி அருகே, வீடு புகுந்து தேங்காய் வியாபாரியை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பி ஓடிய முகமூடி கொள்ளையர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள எடவனஅள்ளியைச் சேர்ந்தவர் சாக்கப்பன் (65). தேங்காய் வியாபாரி. இவருடைய மனைவி பொன்னியம்மாள் (55). கண் பார்வையற்றவர். சாக்கப்பனின் தாய் சூடம்மாள் (90) என்பவரும் இவர்களுடன் வசித்து வருகிறார். இவர்களின் வீடும், தோட்டமும் ஒரே இடத்தில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, சாக்கப்பனின் மகன் வேணுகோபால் (30), அவருடைய மனைவி சிவரஞ்சனி (24) ஆகியோர் வீட்டிற்கு வந்துள்ளனர்.
நேற்று முன்தினம் (21/10/2019) இரவு, அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் கதவை சிலர் தட்டுவது தெரிய வந்தது. சாக்கப்பன் கதவை திறந்து பார்த்தபோது முகமூடி அணிந்த 6 கொள்ளையர்கள் வீட்டிற்குள் 'திபுதிபு'வென நுழைந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாக்கப்பன், கூச்சல் போட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள், சாக்கப்பனின் கை மணிக்கட்டில் கத்தியால் வெட்டினர். ரத்தம் பீறிட்டு வெளியேறியது. அவருடைய அலறல் சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மற்றவர்களும் விழித்துக்கொண்டு நுழைவு வாயில் அருகே வந்தனர்.
கொள்ளை கும்பல் அவர்களிடம் கத்தி முனையில் நகை, பணம் கேட்டு மிரட்டியது. சுதாரித்துக் கொண்ட சாக்கப்பனின் மருமகள் சிவரஞ்சனி உடனடியாக வீட்டின் மற்றொரு அறைக்குள் சென்று உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டார். அங்கிருந்து செல்போன் மூலம் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் அளித்தார். இதுகுறித்து தகவல் அறிந்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
கொள்ளையர்களின் தாக்குதலால் பலத்த காயம் அடைந்த சாக்கப்பனை மீட்டு, ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடந்த பரிசோதனையில் சாக்கப்பன் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து ராயக்கோட்டை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். டிஎஸ்பி முரளி (பொறுப்பு), ஆய்வாளர் சிவலிங்கம் மற்றும் காவலர்கள் நிகழ்விடம் வந்து விசாரணை மேற்கொண்டனர். இரவு நேரத்தில் முகமூடி கொள்ளையர்கள் தேங்காய் வியாபாரியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.