கரோனா தடுப்பு பணிக்காக தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூபாய் 367.05 கோடி நன்கொடை வந்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக அரசு கரோனா வைரஸ் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும், நிவாரண பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்த நிவாரண பணிகளுக்கென முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், அரசு சார் நிறுவன ஊழியர்கள், அரசு சார் வாரியங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து மே 14- ஆம் தேதி வரை மொத்தம் 367 கோடியே 5 லட்சத்துக்கு 38 ஆயிரத்து 343 ரூபாய் பெறப்பட்டுள்ளது.
குறிப்பாக மே- 6 ஆம் தேதி முதல் மே- 14- ஆம் தேதி வரை 19 கோடியே 29 லட்சத்து 22 ஆயிரத்து 903 ரூபாய் வரப்பெற்றுள்ளது. நிவாரண நிதி அளித்த நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.
சக்தி மசாலா நிறுவனம் ரூபாய் 5 கோடியும், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் ரூபாய் 2 கோடியும், மோபிஸ் இந்தியா பவுண்டேஷன் 1 கோடியே 50 லட்சம் ரூபாயும், சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனம் ரூபாய் 1 கோடியும், இந்தியன் ஆயில் நிறுவனம் ரூபாய் 1 கோடியும், பைஜூஸ் நிறுவனம் ரூபாய் 1 கோடியும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.