சேலம் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்ட பணி, கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "சேலம் மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 39,317 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சென்னையில் ரூபாய் 965 கோடியில் ஸ்மார்ட் சிட்டிக்கான பணிகள் நடைபெறுகின்றன. 7.5% இட ஒதுக்கீட்டில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 26 பேருக்கு மருத்துவ சீட் கிடைத்துள்ளது. வீட்டிலேயே இருந்து கொண்டு அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் ஊழல் என குற்றஞ்சாட்டுகிறார் ஸ்டாலின். மு.க.ஸ்டாலினுக்கு அறிக்கை நாயகன் என்ற பட்டம் தான் கொடுக்க வேண்டும்.
தமிழகத்தின் பட்ஜெட் அளவுக்கு 2 ஜியில் தி.மு.க. ரூபாய் 1.76 லட்சம் கோடிக்கு ஊழல் செய்தது. அரசின் திட்டங்களைப் பற்றி அறியாமல் தினமும் அறிக்கை வெளியிட்டு வருகிறார் ஸ்டாலின். ஆன்லைனிலேயே டெண்டர், ஆன்லைனிலேயே பணம் செலுத்தும் நடைமுறையில் எப்படி ஊழல் நடக்கும்? ஆன்லைன் டெண்டரில் யார் வேண்டுமானாலும் ஒப்பந்தப் புள்ளி கூறலாம். என் உறவினருக்கு டெண்டர் கொடுத்து விட்டதாக பேசிக்கொண்டேயிருக்கிறார் ஸ்டாலின். ரூபாய் 100 கோடி டெண்டரை ரூபாய் 170 கோடிக்கு டெண்டர் விட்டு தி.மு.க. ஆட்சியில் ஊழல் செய்துள்ளனர். அ.தி.மு.க. ஆட்சியில் டெண்டர் விட்டதில் ஊழல் நடைபெறவில்லை. நாங்கள் டெண்டர் கொடுத்ததாகக் கூறப்படும் மூன்று நிறுவனங்களுக்கு தி.மு.க. ஆட்சியிலும் டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் அணைகள் கட்டப்பட்டபோது அதனை அப்போதைய முதல்வர் கருணாநிதி தடுக்கவில்லை. சேலத்தில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என கனிமொழி எம்.பி. கூறுவது தவறு. சேலத்தில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விலை வீழ்ச்சியில் இருந்து விவசாயிகளைக் காப்பது வேளாண் சட்டங்கள். மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ‘பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால் மெய் திருதிருன்னு முழிக்குமாம்’ தேவையில்லை எனில் விற்பனை ஒப்பந்தத்தில் இருந்து விவசாயிகள் விலகிக் கொள்ளலாம்" இவ்வாறு முதல்வர் பேசினார்.