
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் உடனான கலந்துரையாடலின் போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "பொதுப்பணித்துறை சார்பாக 272 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மழை நீர் முறையாகச் சேமிக்கப்படுகிறது. விலை வீழ்ச்சியில் இருந்து விவசாயிகளைக் காப்பாற்றவே வேளாண் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இந்த ஆண்டு சாதனை அளவாக 32 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மிக அதிக விளைச்சல் வரும்போது அரசால் முழுமையாகக் கொள்முதல் செய்து சேமிக்க இயலாது. விளைச்சல் அதிகரிக்கும் போது விவசாயிகள், வர்த்தகர்கள் விளைபொருட்களைக் கூடுதலாக இருப்பு வைத்துக் கொள்ளலாம். வரி மற்றும் இடைத்தரகர் கமிஷனில் இருந்து விவசாயிகள் காப்பாற்றப்படுவார்கள். விவசாய விளைபொருட்களை விற்பதில் வர்த்தகர்களுடன் மேற்கொள்ளும் ஒப்பந்தம் மூலம் விவசாயிகள் கூடுதல் விலை பெறலாம். விவசாயிகள் பயன்பெறும் வகையில்தான், புதிய வேளாண் சட்டங்களின் அம்சங்கள் இருக்கின்றன." இவ்வாறு முதல்வர் பேசினார்.