இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு 'தாதாசாகேப் பால்கே விருது' வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய திரைத்துறையின் மிக உயரிய விருதான 'தாதாசாகேப் பால்கே விருது' நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தாதாசாகேப் பால்கே விருதுபெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு நான் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தேன். திரைத்துறையில் தங்களது கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் இந்த தாதாசாகேப் பால்கே விருது. தாங்கள் இன்னும் பல விருதுகள் பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "திரையுலகில் சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்காக, இந்திய சினிமாவின் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான 'தாதாசாகேப் பால்கே விருது' பெறும் அன்புச் சகோதரர் ரஜினிகாந்துக்கு எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இனிய நண்பரும், தன்னிகரற்ற கலைஞனுமாகிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 'தாதாசாகேப் பால்கே விருது' கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். தாமதம் என்றாலும் வரவேற்புக்குரியது! நடிப்புக்கும், நட்புக்கும் இலக்கணமான நண்பர் ரஜினி அவர்களின் கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடர வாழ்த்துகள்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
பா.ம.க.வின் இளைஞரணித் தலைவர் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவில் திரைத்துறையின் மிக உயர்ந்த விருதான 'தாதாசாகேப் பால்கே விருது' நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. விருதுபெற்ற இனிய நண்பர் ரஜினிகாந்துக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்!
தமிழ்நாட்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவதாக இந்த விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டிருப்பது தமிழ்த் திரையுலகிற்குப் பெருமை சேர்க்கும் விஷயமாகும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.