15- வது தமிழக சட்டப்பேரவையின் 8 ஆவது கூட்டத்தொடர் இன்று (06.01.2020) காலை 10.00 மணியளவில் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எத்தனை நாட்கள் பேரவை கூட்டம் நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் ஜனவரி 9 ஆம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆளுநர் உரையின் மீது 2 நாட்கள் விவாதம் நடக்கிறது. ஜனவரி 9- ஆம் தேதி ஆளுநர் உரை மீது பதிலுரை நடக்கிறது.
இதனிடையே தமிழக சட்டப்பேரவை நாளை (07.01.2020) காலை தொடங்கி மாலை வரை நடைபெறும் என்றும், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நாளை (07.01.2020) இரங்கல் தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்படும் என்று சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
மேலும் புதன்கிழமை மதியம் வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது. அன்றைய விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேசுவார். அதனைத் தொடர்ந்து கடைசி நாளான வியாழக்கிழமை அன்று முதல்வர் பதிலுரை, சட்டத்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று சபாநாயகர் கூறினார்.