தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று (06/04/2021) நடந்த வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இன்று காலை 07.00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 07.00 மணியுடன் நிறைவடைந்தது. தமிழகத்தில் அமைக்கப்பட்டிருந்த 88,937 வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்காளர்கள் வாக்களித்தனர். தேர்தலில் 3,585 ஆண் வேட்பாளர்கள், 411 பெண் வேட்பாளர்கள், இரண்டு மூன்றாம் பாலினத்தவர் என 3,998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் அதிகபட்சமாக கரூர் சட்டமன்றத் தொகுதியில் 77 வேட்பாளர்களும், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் 31 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
எடப்பாடியில் எடப்பாடி பழனிசாமி, போடிநாயக்கனூரில் ஓ.பன்னீர்செல்வம், கொளத்தூரில் மு.க.ஸ்டாலின், திருவொற்றியூரில் சீமான், கோவில்பட்டியில் டிடிவி.தினகரன், கோவை தெற்கில் கமல்ஹாசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
வாக்குப்பதிவு முடிந்த நிலையில், அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2- ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.